அல்குர்ஆனுக்கு மொழியாக்கம் – விளக்கம் – சுயவிளக்கம்

in 2024 மே

அல்குர்ஆனுக்கு

மொழியாக்கம்விளக்கம்சுயவிளக்கம்

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

எல்லாம் வல்ல இறைவன் உலகின் எல்லாப் பகுதி மக்களுக்கும் அவர்களிலிருந்தே அவனது தூதரைத் தேர்ந்தெடுத்து அவரவர்கள் பேசக்கூடிய மொழியிலேயே அவனது நேர்வழி அறிவிப்புகளை வஹீ மூலம் இறக்கி அம்மக்களை நேர்வழிப்படுத்தினான். இறுதியாக வாழ்க்கை நெறிமுறைகளை முழுமைப்படுத்தி, பூமியின் மையப் பகுதியான அரபு நாட்டில், அரபி மொழி பேசும் அம்மக்களிலிருந்தே தனது இறுதித் தூதரைத் தேர்ந்தெடுத்து, அவரும் அந்த மக்களும் பேசும் அரபி மொழியிலேயே, முழுமைப்படுத்தி இறுதி செய்யப்பட்ட வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனை இறக்கி அருளினான். உலகம் அழியும் வரை மனித குலத்திற்கே இந்த அல்குர்ஆனே வாழ்க்கை நெறி காட்டும் நூல் என்று அதிலேயே அறிவிப்புச் செய்து, அதை இறுதி வரை பாதுகாக்கும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டான். (பார்க்க: 5:3, 3:19,85, 15:9)

இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் அனைவரும், ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு, ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கு, ஒரு குறிப்பிட்டக் குடும்பத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டனர்.

ஆனால் அதற்கு மாறாக பூமியின் நடுப் பகுதியிலுள்ளதும், இறைவனின் முதல் ஆலயம் கஃபா இருக்கும் இடமுமான அரபு நட்டில் அரபு மக்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இறுதி இறைத் தூதர் அகில உலக மக்களுக்குமாகத் தூதராக அனுப்பப்பட்டார்கள். (பார்க்க: 17:105, 21:107, 25:56, 33:45, 34:28, 35:24, 48:8)  

அரபி மொழி பேசும் மக்களிலிருந்து இறுதி இறைத்தூதர் தேர்வு செய்யப்பட்டதால், அந்த மக்கள் பேசிய அரபி மொழியிலேயே நிறைவு செய்யப்பட்ட இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. உலகத்திலுள்ள அனைத்து நாடுகளிலுமுள்ள அனைத்து மொழிகள் பேசும் முஸ்லிம்களையும் இணைக்கும் மொழியாக அரபி மொழி இருக்கிறது. பல மொழிகள் பேசும் நம் தாய்நாடான இந்தியாவிலுள்ள மக்களை இணைக்கும் மொழியாக அந்நிய மொழியான ஆங்கிலம் இருப்பதுபோல், எண்ணற்ற மொழிகள் பேசும் மக்களை இணைக்கும் மொழியாக அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட அரபி மொழி இருக்கிறது. அதன் காரணமாகவே தொழுகைக்கு அழைக்கும் பாங்கையும், தொழுகையில் படிப்பவற்றையும் அரபி  மொழியிலேயே  படித்து  வருகிறோம்.

இதற்கு முன்னர் அருளப்பட்ட அனைத்து நெறிநூல்கள் இறங்கிய அனைத்து மொழிகளும் இன்று நடைமுறையில் இல்லாமல் செத்த மொழிகளாக ஆனது போல், அல்குர்ஆன் இறங்கிய அரபி மொழி செத்த மொழியாகாமல் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. பல நாடுகளில் அரபி மொழி பேசப்பட்டு வருகிறது. முஸ்லிம்களை ஒழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியோடு செயல்படும் இஸ்ரேல் நாட்டிலும் அரபி மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. .நா.சபையில் பேச அனுமதிக்கப்பட்ட மொழிகளில் அரபி மொழியும் உண்டு என்பது  இங்கு  கவனத்தில் கொள்ளவேண்டியது. 

முன்னைய நெறிநூல்கள் அனைத்தும் பதிந்து பாதுகாக்கப்படவும் இல்லை. அவை இறங்கிய மொழிகளும் பேச்சு வழக்கில் இல்லாமல் செத்த மொழிகளாக ஆகிவிட்டன. அதனால் முன்னைய மதகுருமார்கள் தங்களின் சுய கருத்துக்களை அவற்றில் புகுத்தி நடைமுறைச் சாத்தியமில்லாத வேதாந்தங்கள் ஆக்கி அவற்றை வேதங்கள் என மக்களை நம்பவைத்து மோசடி பண்ணுகிறார்கள். இறுதி நெறிநூல் அல்குர்ஆன் உடனுக்குடன் பதிந்துப் பாதுகாக்கப்பட்டு விட்டதாலும், அது இறங்கிய அரபி மொழி பல நாடுகளில் பேச்சு வழக்கில் இருப்பதாலும், அதில் தங்கள் சுய கருத்துக்களைப் புகுத்தி நடைமுறைச் சாத்தியமில்லா வேதாந்தங்கள் நிறைந்த வேதமாக்க முஸ்லிம் மதகுருமார்களால் முடியவில்லை. ஆயினும் இதர மதகுருமார்களைப் பின்பற்றி முஸ்லிம் மதகுருமார்களும் அல்குர்ஆனையும் வேதம் என்றே  சொல்கிறார்கள்;  எழுதுகிறார்கள்.

அரபு மொழிக்கு இப்படிப்பட்ட சிறப்புகள் உண்டே அல்லாமல் முஸ்லிம் மதகுருமார்கள் அளந்து விடுவது போல் வேறு எவ்விதத் தனிச் சிறப்புகளும் இருப்பதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ எவ்வித ஆதாரமும் இல்லை. அரபி மொழி கற்றவர்கள் மட்டுமே உயர்வானவர்கள். ஆலிம்கள் என்ற அவர்களின் பிதற்றல் வெற்றுப் பிதற்றலே அன்றி வேறில்லை. அப்படிப் பிதற்றுவதின் மூலம் தங்களை ஜாஹில்கள்மடையர்கள் அபூ ஜஹீலின் வாரிசுகள்  என  அவர்களே  உறுதிப்படுத்துகிறார்கள்.

மனித குலத்திற்கே சொந்தமான அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறி முஸ்லிம் அல்லாதவர்களை குர்ஆனை விட்டுத் தூரப்படுத்தியது பெருங்குற்றம்; மவ்லவி அல்லாத முஸ்லிம்களுக்கும் குர்ஆன் விளங்காது; ஒளூ இல்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது என்று கூறி முஸ்லிம்களையும் அல்குர்ஆனை விட்டுத் தூரப்படுத்தியது மிகப் பெரிய குற்றம். நாளை மறுமையில் இவர்கள் அனைவரின் பாவச் சுமைகளைச் சுமக்கும் பரிதாப நிலையிலேயே  முஸ்லிம்  மதகுருமார்கள்  இருக்கிறார்கள்.

6:155, 14:1, 20:2,3,134, 88:21 போன்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள் இந்த பரிதாப நிலையை அறிய முடியும்.

இத்தோடு விட்டார்களா? இன்னும் கேளுங்கள் அவர்கள் மனித குலத்திற்கு இழைத்து வரும் அநியாயங்களை, அல்குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டாலும் பல மொழிகள் பேசும் மனித குலத்திற்கே சொந்தமான அந்நெறிநூல் பல மொழிகளிலும் ஆரம்பத்திலேயே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இம்மதகுருமார்கள் அதற்கு இடம் தரவே இல்லை. மிக நீண்ட காலமாக அல்குர்ஆன் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாமலேயே இருந்தது. இப்புரோகிதர்கள் குர்ஆனில் இருப்பதாகச் சொல்பவற்றை அப்படியே கண்மூடித்தனமாக நம்பி செயல்படும் நிலையில் முஸ்லிம்கள் இருந்தார்கள். தஃப்ஸீர் என்ற பெயரால் மனிதக் கற்பனைகளை அரபியில் எழுதி எண்ணற்ற வேதங்களை(?)  குவித்தார்கள்.  

அதனால் இம்மதகுருமார்களுக்கு, மார்க்க முரணான இறைவனுக்கு இணை வைக்கும் அதாவது கொடிய சிர்க்கள், குஃப்ர்கள், பித்அத்கள் நிறைந்த மத்ஹபுகள், தரீக்காக்கள், தர்கா சடங்குகள், கூடு, கொடி, கந்தூரி, ஃபாத்திஹாக்கள், மீலாது, மவ்லூது, சலாத்து நாரியா, நூறு மசாலா, இருட்டு திக்ர், இன்ன பிற அனாச்சாரங்கள், மூட நம்பிக்கைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் இஸ்லாத்தின் பேராலேயே அரங்கேற்ற முடிகிறது. பல கப்ருகளையும், தர்க்காக்களையும் அனைத்து ஊர்களிலும் பார்க்க முடியும். 

காயல்பட்டினவாசிகள் அரபு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று பெயர்; அங்கு தான் மற்ற ஊர்களை விட அதிகமான ஆண், பெண் தர்காக்களைப் பார்க்க முடிகிறது. சிர்க், குஃப்ர், பித்அத் அனாச் சாரங்கள் அங்கிருந்துதான் மற்ற ஊர்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியான வரலாறையே பார்க்கிறோம். இப்படி தர்காக்கள் இல்லாத ஊர்கள் பாவம் செய்த ஊர்கள் என்று முஸ்லிம்கள் நம்பும் அளவில் சிர்க்குடைய கோட்டைகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பெருகிப் போனதற்கு அடிப்படைக் காரணம் இறுதி நெறிநூல் அல்குர்ஆனில் அல்லாஹ் சொல்லியிருப்பதை இந்த மூட முல்லா புரோகிதர்களான மதகுருமார்கள் மக்களிடமிருந்து மறைத்ததுதான்.

நீண்ட நெடுங்காலமாக சுமார் ஆயிரம் வருடங்கள் என்று சொல்லலாம். குர்ஆன் இதர மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுவதைச் சுயநலத்துடன் தடுத்துக் கொண்டிருந்தார்கள். 20ம் நூற்றாண்டில் மக்களிடையே ஆச்சரியப்படத்தக்க அறிவியல் கண்டுபிடிப்புகளும் (Inventions) அதனால் முன்னேற்றங்களும் ஏற்பட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த  முன்னேற்றங்களுக்குக் கருவாக குர்ஆன் இருப்பது உணரப்பட்டது. அப்போதுதான் குர்ஆன் இதர மொழிகளிலும் பெறப்பட வேண்டுமென்ற ஆர்வமும் தூண்டுதல்களும்  அதிகரித்தன.

இம்மதகுருமார்கள் எவ்வளவு காலத்திற்குத்தான் அல்குர்ஆனை மறைத்து வைத்து மக்களை ஏமாற்றமுடியும். ஒருசில அறிஞர்களிடம் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாகப் பெரும் எதிர்ப்புகளிடையே  குர்ஆனுக்கு  மொழியாக்கங்கள்  வெளிவர  ஆரம்பித்தன.

குர்ஆன் மொழியாக்கங்களிலும் தங்களின் சித்து வேலைகளைக் காட்டத் தவறவில்லை இந்த மதகுருமார்கள். சாதாரண மக்கள் படித்தவுடன் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக சரியான மொழியாக்கத்தைத் தராமல் சுற்றி வளைத்து எழுதி, எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்கள் புரியும் வகையில் குர்ஆன் இறக்கப்பட்டதாக 62:2 இறைவாக்குக் கூறும் நிலையில், அதற்கு மாறாகப் பாமர மக்கள் புரியாத நிலையில் மொழியாக்கங்களைச் செய்து, படிக்கும் பாமரர்கள் குழம்பிப் போய் மீண்டும் இந்த மதகுருமார்களைக் கண்மூடிப் பின்பற்றும் ஆபத்தான நிலையையே  தோற்றுவித்துள்ளனர்.

பொதுவாக ஒரு மொழியிலிருந்து பிரிதொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் போது மூல மொழியில் உள்ளதை அப்படியே அந்த மூல மொழி பேசும் மக்களிடம் எடுத்து வைக்கும்போது அந்த மக்கள் எப்படி அதைப் புரிந்து கொள்வார்களோ, அதே புரிதலை மொழியாக்கம் செய்யப் பட்ட மொழி பேசும் மக்களும் புரிய வேண்டும். அதுவே சரியான மொழி பெயர்ப்பாகும்.

உதாரணமாக அரபியில் 4:15ல்ஹத்தாயத வஃப்பாஹுன்னல்மல்த்துஎன்றிருப்பதைமரணம் கைப்பற்றும் வரைஎன்று மொழியாக்கம் செய்வதை விடமரணிக்கும் வரைஎன்று மக்கள் எளிதாகப் புரியும் வகையில் மொழியாக்கம் செய்வதே நல்லது. “Take Your Lunch”  என்று கூறுவதோடுஎடு உன்னுடைய பகலுணவைஎன்று சொல்லமாட்டோம். “உன்னுடைய பகலுணவைச் சாப்பிடுஎன்று கூறுவதே எளிதான புரிதலைத் தரும். ஆங்கிலத்திலுள்ள “Take”என்ற பதத்தின்எடுஎன்று சொல்லை விட்டுசாப்பிடு‘ eat என்ற ஆங்கில சொல்லின் தமிழ்ப் பதம் எப்படி இருக்கலாம் என்ற வாதம் இங்கு எடுபடாது. இப்படிப் பல உதாரணங்களைத் தரமுடியும். வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பதை விட, ஒரு மொழியில் சொல்லப் படுவதை அம்மொழி மக்கள் எப்படி எளிதாக எளிதாகப் புரிகிறார்களோ அதே எளிதான புரிதலை மொழி பெயர்க்கப்பட்ட மொழி பேசும் மக்களும் எளிதாகப் புரியும் வகையில் மொழியாக்கம்  அமைய  வேண்டும்.

இந்த அழகான எளிய நடைமுறையைக் கைவிட்டு வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்ததோடு, அதைப் புரியவைக்கிறோம் பேர்வழிகள் என அடைப்புக்குறிக்குள் தேவையற்ற விளக்கங்களைப் புகுத்திப் படிப்பவர்கள் மேலும் குழம்பிப் போகும் நிலையிலேயே குர்ஆன் மொழியாக்கங்கள் அமைந்துள்ளன. இதுவரை தமிழில் வெளி வந்த குர்ஆன் மொழியாக்கங்கள் இப்படித்தான் அமைந்துள்ளன. பெரும்பாலான மவ்லவிகள் நடுநிலைப் பள்ளிப் படிப்பையே தாண்டாத நிலையில் குருகுல மதரஸாக்களில் சேர்ந்து அரபியையும் அரைகுறையாகவும், மனிதக் கற்பனைகள் நிறைந்த பிக்ஹு நூல்களையும் கற்று மவ்லவி ஆலிம் பட்டத்துடன் வெளிவருவதால் இதற்கு மேல் அவர்களிடம் எதிர்பார்ப்பது  குதிரைக்  கொம்பே.    (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: