ஒன்று சேர்க்கப்படும் நாள் (The day of Resurrection)

in 2024 மே

ஒன்று சேர்க்கப்படும் நாள்

(The day of Resurrection)

மறு பதிப்பு :

இப்பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நம்மை அல்லாஹ் படைப்பினங்களிலே சிறந்த படைப்பாகப் படைத்து அதிலும் ஒப்பற்ற மார்க்கமாகிய இஸ்லாத்தை நம் உயர் வாழ்க்கை நெறியாக பின்பற்றச் செய்தானே அது அவன் நமக்குச் செய்த மாபெரும் கிருபை! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களாகிய நாம் சில அடிப்படை விசயங்கள் மீது நம்பிக்கை கொள்கிறோம். அவை அல்லாஹ்வை நம்புதல், அவனால் இறக்கியருளப்பட்ட நெறிநூல்களை நம்பு தல் அவனால் அனுப்பப்பட்ட தூதர்களை நம்புதல் இறுதி நாள் (மறுமை) உண்டென்று நம்புதல் என்பன போன்றவற்றை நம்பியிருந்தாலும், இறுதியாகச் சொல்லப்பட்ட மறுமை நாள் குறித்த நம்பிக்கை நமக்கு குறைவாகவோ அல்லது அறவே இல்லாத நிலையில் பாராமுகமாகவே  நாம்  இருந்து  வருகிறோம்.

பெறுபவனாக, விபச்சாரம் செய்பவனாக, பொய்சாட்சி கூறுபவனாக, வாக்கு மீறுபவனாக, நன்றி மறந்தவனாக, பிறர் துன்பம் கண்டு இன்புறுபவனாக, தொழுகையில்லாதவனாக, நோன்பு நோற்காதவனாக, இது போன்ற இன்ன பிற பாவங்களைச் செய்பவனாகவும், நன்மைகளை அலட்சியம் செய்பவனாகவும் இருந்து வருவதே இறைவனின் கூற்றுக்கு மாபெரும்  சான்றாக  இருக்கிறது.

நம்மில் பெரும்பாலோர் அந்த நாளில் தப்பித்துக் கொள்ளலாம் என இறுமாந்து கொண்டிருக்கிறோம். எத்தனை கோடான கோடிப் பேர் குழுமும் அந்நாளில் இறைவனின் கண்களில் மண்ணைத் தூவி விட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டுகின்றனர்.  ஆனால்  அல்லாஹ்  கூறுகிறான்.

(நபியே!) (அந்நாளில்) பூமியை வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்கள் (மனிதர்களை) ஒன்று சேர்ப்போம். (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். (அல்குர்ஆன் 18:47)

இவ்வுலகில் நாம் வாழும் காலத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் சில காரியத்தை செய்ய நாடுகிறோம். உதாரணமாக இன்னும் சில நாட்களில், நம்முடைய திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளத என்றால் அதற்காக பல நாட்களுக்கு முன்பாகவே பல் வேறு திட்டங்கள் தீட்டுகிறோம். பொருளாதாரத்தை தண்ணீராய் இறைக்கிறோம். பல்வேறு சிரமங்களைத் தாங்கிக் கொண்டு முயன்று உழைக்கிறோமே?! நாளை நாமனைவரும் சந்திக்க இருக்கும் ஒரு நாளுக்காக, மறுமை நாளுக்காக நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? என்ன முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்?என்ன நல்லறங்களை முற்படுத்தி அனுப்பியிருக்கிறோம்?

இவ்வாலகில் வாழும் காலத்தில் இறைவன் அளித்த அருட்கொடைகளை அனுபவித்து விட்டு மறுமைக்காக எதையும் செய்யாமல் அந்நாளை அடைத்த துர்பாக்கிய சாலி நாளை மறுமையில்  கை சேதப்படுவதை  நெறிநூல்  தெளிவாகச்  சொல்கிறது.

அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான். அந்நாளில் உணர்வு பெறுவதினால் அவனுக்கு என்ன பலன். “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை முற்படுத்தி அனுப்பியிருக்க வேண்டுமேஎன்று அப்போது  மனிதன்  கூறுவான்.’   (குர்ஆன் 89:23,24)

எவர் தான் வாழும் காலத்தில் இறைவனைப் பயந்து, அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி, அந்நாளுக்காக நன்மையை முற்படுத்தி அனுப்பியிருந்தாரோ அத்தகைய மேலான  அடியார்களைப்  பற்றி  நெறிநூல்  கூறுகிறது.

(அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு. மேலும் அவர்கள் அந்நாளில் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்த்து இருப்பார்கள்”.  (அல்குர்ஆன் 27:89, 56:3)

படைக்கப்பட்ட மனிதர்கள் அனை வரும் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்ற அந்நாளைப் பற்றி இறைவனும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் தெளிவாகக் கூறுகிறார்கள். எவ்வாறு எனில் நாம் ஓரிடத்திற்கு உல்லாசப் பயணம் செல்கிறோம். உதாரணமாக ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலுக்கு செல்கிறோம் என்றால், அதைக் கண்டு வந்த பிறகு அது பற்றி எப்படியயல்லாம் நம் நண்பர்களிடம் கூறி சந்தோ­ப்படுகிறோம்; அதன் குறை நிறைகளை விலாவாரியாக  அலசுகிறோம்.

என்னே! அருமையான கட்டடக் கலை, நேர்த்தியான வடிவமைப்பு; ஒவ்வொரு அங்குலமும் அழகான வடிவமைப்பு, கண் கவர் தோற்றம், காணக் கண் கோடி வேண்டும் என்று பெருமையாக சிலாகித்துச் சொல்கிறோம். நான் அங்கு சென்று வந்த அந்நாள் என் வாழ்வில் மறக்கவியலா ஒரு நாள்? என்று கூறி புளகாங்கிதம் அடைகிறோம். ஆனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மனிதகுலம் மறுக்க இயலாத அந்நாளைப் பற்றி அல்லாஹ்வின் வர்ணனையைப்  பாருங்கள்!

சூரியன் (ஒளியின்றி) சுருட்டப்படும், நட்சத்திரங்களை உதிர்ந்து விடும். மலைகள் பெயர்க்கப்பட்டு விடும்.  கடல்கள்  தீ  மூட்டப்படும்”.   (அல்குர்ஆன் 81:1-6)

வானம் பிளந்து விடும்; கடல்கள் அகற்றப்படும்.  கப்ருகள் (மண்ணறை) திறக்கப்படும்”.   (அல்குர்ஆன் 82:1-4)

பூமி விரிக்கப்பட்டு தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி வெறுமையாகிவிடும்.”
(
அல்குர்ஆன் 84:3-4)

வானம்  துடித்துக்  குமுறும்,  மலைகள்  பெயர்ந்து  பஞ்சாய்ப்  பறக்கும்”.    (52:8,9)

பூமியும் மலைகளும் தூக்கி (வீசப்பட்டு) ஒன்றோடொன்று பலமாக மோதும்படி அடிக்கப்படும்”.     (அல்குர்ஆன் 69:14)

வானம் உருக்கப்பட்ட செம்பைப் போன்று  ஆகிவிடும்”.     (அல்குர்ஆன் 70:8)

பூமி  பலமாக  அதி  அதிர்ச்சியுறும்”.   (79:6)

மனிதன் செய்த (தீவினைகளின்) மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும்”.   (அல்குர்ஆன்  86:9)

குழந்தைகள்  நரைத்தவர்களாக்கி  விடும்”.   (அல்குர்ஆன் : 73:17)

நபி(ஸல்) கூறினார்கள்: ஒருவன் மறுமை நாளைக் காண விரும்பினால், அவன் இதஷ் ஸம்ஸு குவ்விரத்(81வது) அத்தியாயம்) இதஸ்ஸமாஉன் ஃபதரத்(82வது அத்தியா யம்) இதஸ்ஸமாஉன் ஸக்கத்(84வது அத்தியாயம்) ஆகிய மூன்று அத்தியாயங்களையும் ஓதட்டும்! நெஞ்சில் பதியும் வண்ணம், மறுமை நாள் குறித்து இம்மூன்று அத்தியாயங்களிலும் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) நூல் : திர்மிதி.

அந்நாளில் நிலைமைகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் நம் மனக்கண் முன் கொண்டு வருகின்றனர்.

அத்துணை மாபெரும் நாளில் அரசனாகிய அல்லாஹ்வின் முன் எவனும் பேச சக்தி பெறமாட்டான்.  எவருக்கு  அவன்  அனுமதி  வழங்குகிறானோ  அவனைத் தவிர.

அவனே(நிய்யத்) தீர்ப்பு நாளின் அதிபதி      (அல்குர்ஆன் 1:3)

“…அர்ரஹ்மான் அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள். அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவரைத் தவிர்த்து வெறெவரும் பேசமாட்டார்.’
(
அல்குர்ஆன் 79: 37,38)

இவ்வுலக வாழ்க்கையில் நம்முடைய தேவைகள் பிறரிடம் யாசித்தோ, பிறரின் உதவியை எதிர்பார்த்தோ பூர்த்தி செய்து கொண்டு காலந்தள்ளிக் கொண்டிருக்கிறோம். சொல்லப் போனால் உடல் உறுப்புகளைக் கூட தானமாகப் பெற்று உயிர் வாழத் தலைப்படுகிறோம். ஒருவனுக்கு இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டது. மாற்றுச் சிறுநீரகம்  பொருந்தியாக வேண்டிய கட்டாய சூழலில் அவனைப் பெற்ற தாய் பாசத்தைக் கொட்டி வளர்த்த தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அரவணைத்த உறவினர், உயிராய்ப் பழகிய நண்பர்கள் என சுற்றமும், நட்பும் வரிந்து கட்டிக் கொண்டு அவனுக்கு சிறுநீரகத்தை தானமாய்த் தர முன்வரும்.

ஆனால் அமளியான அந்த மறுமை நாளில் இந்த சுற்றத்தாரும், நட்பு வட்டமும் இம்மனிதனுக்கு  எவ்வாறு  இருப்பர்  என்பதை  அல்குர்ஆன்.

யுக முடிவின்போது காதைச் செவிடாக்கும் பெருஞ்சப்தம் வரும்போது அந்நாளில் மனிதன் விரண்டு ஓடுவான். தன் சகோதரனை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் வெருண்டோடுவான். அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்”.   (அல்குர்ஆன் : 80:33-37)

அன்றைய தினம் அவனுக்கு அனுதாபப்படும் எந்த நண்பனும் இல்லை.”  (அல்குர்ஆன் 69:35)

மனிதனைப் படைத்து, அவனுக்கு சுவையான உணவும், குடிப்பதற்கு நீரும் தந்து, சுவாசிப்பதற்கு காற்றைத் தந்து, இவ்வுலக இன்பங்களைக் கண்டு ரசிப்பதற்கு இரு கண்களைத் தந்து, கேட்பதற்கு இரு செவிகளையும், உழைப்பதற்கு இரு கை, கால்களையும் தந்து, அவனுக்கோ அழகிய வடிவம் தந்து, அவன் வாழ்வதற்கு இந்த பூமியை விசாலமாக்கித் தந்து அந்த ரஹ்மானுடைய அருட்கொடைகளை பொய்யாக்கி அவனை மறந்து அவனுடைய வசனங்களை அலட்சியப்படுத்திய இறை மறுப்பாளர்களின் நிலையைப் பற்றி இறைவாக்கு.

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான) காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதில் உறுதியாக நின்றவையுமாகும். கொழுந்துவிட்டெறியும் நெருப்பில் அவை புகும் கொதிக்கும் ஊற்றிலிருந்து அவர்களுக்கு விசச் செடிகளைத் தவிர வேறு உணவு இல்லை. அது அவர்களை (கொழுக்கச்) செழிக்கவும் வைக்காது. பசியையும் தணிக்காது.’  (அல்குர்ஆன் 88:2-7,77:28)

இவ்வுலகில் எந்த சரீர சுகத்திற்காக ஓடி ஓடி உழைத்தானோ அந்த உடல் உறுப்புகள் அவனுக்கு எதிராக அந்நாளில் சாட்சி சொல்லும். பிறர் பொருளை அநியாயமாகப் பறித்துச் சேர்த்த செல்வமும் அவனுக்கு பயன் தராது.

அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் பேசும். கால்கள் சாட்சி சொல்லும்.”(36:45, 41:2023)

“(அந்நாளில்) என் செல்வம் எனக்கு பயன்படவில்லையே! என் செல்வாக்கும், அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே! (என்று அரற்றுவான்)”. (62:28,29)

அந்நாளின் நிலை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது”.

உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் நேரடியாகப் பேசுவான். அங்கு பரிந்துரை செய்பவர் எவரும் இருக்கமாட்டார். மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது. மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான். பரிந்துரை செய்பவர், உதவுபவர் யாராவது உள்ளனரா என்று! அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் இராது. பிறகு இடப்பக்கம் பார்ப்பான். அங்கும் அவனது செயல்களைத் தவிர வேறெதுவும் தென்படாது. முன்பக்கம் பார்வையை செலுத்து வான். அங்கு (பயங்கரங்கள் நிறைந்த) நரகத்தை மட்டுமே காண்பான். எனவே மக்களே! நரக நெருப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முயலுங்கள். பாதி பேரீத்தம் பழத்தை தர்மம் செய்தேனும்!” (அலீ (ரழி), புகாரி, முஸ்லிம்)

பயங்கரங்கள் நிறைந்த அந்நாளில், படைத்தவனின் அருட்கொடைகளுக்காக நன்றி செய்து, அவனை முறைப்படி வணங்கி, தான தர்மங்கள் செய்து, அவனை பயந்து நல்லறங்கள் பலவற்றை முற்படுத்தி அனுப்பியிருந்தானே அந்த நல்லடியார்களைப் பற்றி அல்குர்ஆன்;

அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும். தம் முயற்சி (நற்பயன் அடைந்தது? பற்றி திருப்தியுடன் இருக்கும். உன்னதமான சுவனச் சோலையில், அதில் நீரூற்று உண்டு, உயர்ந்த ஆசனங்கள் உண்டு, குவளைகளும், அணியாக்கப்பட்ட திண்டுகளும், உயர்ந்த கம்பளங்களும் உண்டு‘ (88:8-16, 57:12, 69:21-24, 27:89, 76:11-22, 32:17)

இத்தகைய நல்லடியார்கள் மீது மலக்குகள் இறங்கி,

“….பயப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள். நாங்கள் உலக வாழ்விலும் மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள். (சுவனத்தில்) நீங்கள் விரும்பியதெல்லாம் கிடைக்கும். இது மன்னிப்போனும், கிருபை யுடையோனுமாகிய.  அல்லாஹ்வின்  விருந்தாகும்.  (41:30-32)

இந்நாளில் கொடூரத்திலிருந்து நமது தலைவர் நபி(ஸல்) அவர்களே பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்  என்றால்,  நம்முடைய  நிலை  என்னவாகுமோ? 

நபி(ஸல்) அவர்கள் உறங்க நாடும்போது கீழ்க்கண்டவாறு பிரார்த்திப்பார்கள்:

எனது இறைவனே! உனது அடியார்களை (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில் உன்னுடைய வேதனையிலிருந்து என்னை காப்பாயாக! நூல்: திர்மிதி, அவூதாவூத்

அந்நாள் நமக்கு மிக இலேசான  நாளாக அமைய நாம் நல்லறங்களை முற்படுத்தி அனுப்பத் தாயாராவோம்!

இறைவா! அந்நாளில் எங்களை மன்னிப்பாயாக! மேலும் நல்லோர்களுடன் எங்களை சேர்த்தருள்வாயாக!  ஆமீன்.

Previous post:

Next post: