முஸ்லிம்-முஸ்லிமீன்-முஸ்லிமன்-முஸ்லிமத்தின்-

in 2024 மே

முஸ்லிம்முஸ்லிமீன்முஸ்லிமன்முஸ்லிமத்தின்

முஸ்லிமத்தன்முஸ்லிமைனி என்பது குறித்து

எஸ்.எம்.அமீர்,  நிந்தாவூர், இலங்கை.

2024  ஏப்ரல்  தொடர்ச்சி….

எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன்தான்என்பதுதான். ஆகவே நீங்கள் அவனுக்கு (முற்றிலுமாக) வழிப்பட்டு (முஸ்லிம்களாக) நடப்பீர்களா? (என்று நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன்: 21:108) அதாவது, இக்கட்டளைக்கு முழுவதுமாக இணங்கி அடிபணிந்து முஸ்லிம்களாக இருப்பீர்களாக.  (தஃப்சீர் இப்னு கஸீர்: 5:947-950)

இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட இறைநூலின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட இறைநூலின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே! மேலும்  நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்கள் ஆவோம்என்று கூறுவீர்களாக. (அல்குர்ஆன்: 29:46) என உயர்ந்தோன் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

அதாவது: வேதக்காரர்களான யூதர்களுடனும், கிறிஸ்தவர்களுடனும், விவாதம் புரிய வேண்டிய அவசியம் நேரும்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்  வழிகாட்டுகின்றான்.  (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:58-61)

இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை; முற்றிலும் வழிபட்டவர்களாக, (முஸ்லிம்களாக) நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்யமுடியாது. (அல்குர்ஆன் 30:53) என்று உயர்ந்தோன் அல்லாஹ்  குறிப்பிடு கின்றான். 

அதாவது : யார் பணிந்தும் சொல் கேட்டும் முற்றாகக் கட்டுப்பட்டும் முஸ்லிமாக நடந்துகொள்கிறார்களோ அவர்களை மட்டுமே நீர் செவியேற்கச் செய்யமுடியும். ஏனெனில் அவர்கள்தான் உண்மையைச் செவியுற்று அதைப் பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் ஆவர். இதுதான் இறை நம்பிக்கையாளர்களின் நிலையாகும்.(தஃப்சீர் இப்னு கஸீர் : 7:154-157) மேலும்;

நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக இருக்கின்றேன் என்றுதான் நாமும் சொல்ல வேண்டும்:

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும், அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, பருவ வயதை அடைந்ததும்; “இறைவனே நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவு வதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர் களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன். அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக)  இருக்கின்றேன் என்று  கூறுவான்.”    (அல்குர்ஆன் 46:15)

அதாவது; இது பருவ வயதை அடைந்த மனிதனுக்கு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பக்கம் முற்றிலுமாகத் திரும்பி முஸ்லிமான நிலையில் பாவமன்னிப்புக் கோருவதன் மூலமும் அதில் உறுதியுடன் இருப்பதன் மூலம் கிடைக்கும் வழிகாட்டுதலாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 8:393-401) மேலும்;

முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்  என்பது  அல்லாஹ்வின்  கட்டளை:

இறை நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். (அல்குர் ஆன் 3:102) என்று இந்த வசனம் கூறுகின்றது. அதாவது; நீங்கள் ஆரோக்கியத்தோடும் உடல்நலத்தோடும் இருக்கும்போதே இஸ்லாத்தின் மீது முழுமையான பற்றுதலோடு முஸ்லிமாக இருங்கள். அப்போதுதான் இறக்கும்போதும் முஸ்லிம்களாகவே இறப் பீர்கள். ஏனெனில் ஒருவர் உயிர் வாழும் போது எந்தக் கொள்கையில் இருக்கிறாரோ அந்தக் கொள்கையில்தான் பெரும்பாலும் அவர் இறப்பைச் சந்திப்பார். எந்தக் கொள்கையில் அவர் இறந்தாரோ அதில்தான் அவர் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார். இதுவே சங்கைக்குரிய இறைவனின் வழக்கமாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 2:174-181) மேலும்;

பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றை விட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அறிவித்தார்.  (புகாரி:10)

இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரழி) அறிவித்தார். (புகாரி: 11) அத்தகைய;

இரு சாட்சிகளாக முஸ்லிம்களே இருக்க வேண்டும் :

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபத்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடைக்காவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும்நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய உறவுகளாயிருந்த போதிலும்,  நாங்கள்  அல்லாஹ்வுக்காக  சாட்சியங்  கூறியதில்  எதையும் மறைக்கவில்லை;

அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும். (அல்குர் ஆன் 5:106) என இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இங்குஉங்களைச் சேர்ந்த இருவர் என்பதற்கு; “முஸ்லிம்களைச்சேர்ந்த இருவர் என்பது பொருளாகும். இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் இவ்வாறே விளக்கம் அளித்துள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 3:352-364)

Previous post:

Next post: