வாசிப்பவருக்கு  மாற்றம்  ஏற்பட  வழிகாட்டும்  இறைநூல்!

in 2024 மே

வாசிப்பவருக்கு  மாற்றம்  ஏற்பட  வழிகாட்டும்  இறைநூல்!

M. சையது முபாரக்,  நாகை

2024  ஏப்ரல்  தொடர்ச்சி….

1. உறுதியான இறைநம்பிக்கை, இறையச்சம்  இருக்கவேண்டும்:

நம்மைப் படைத்து பரிபாலிக்கும் எஜமான். அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் அல்குர்ஆன் என்ற ஆழமான, உறுதியான நம்பிக்கையுடன் வாசிக்கவேண்டும். இம்மை மறுமை வெற்றிக்கான திறவுகோல் அல்குர்ஆன் என்பதை இறையச்சத்துடன் அழுத்தமாக அடிமனதில் பதிய  வைத்து  படிக்கவேண்டும்.   (பார்க்க : 2:2, 8:2)

2. தூய்மையான  எண்ணம்  வேண்டும்:

நம் எஜமானன் அல்லாஹ்விடம் நமது நெருக்கம் அதிகமாகி விடவேண்டும் என்ற எண்ணம் மிகைக்க இறைநூலை வாசிக்கவேண்டும். அதற்கு மாறாக, மன இச்சைக்குச் சாதகமாக வாசிக்க நினைத்தால் அவன் தனது நோக்கத்தில் வெற்றி பெறலாம். ஆனால், அதன் வளமான அறிவுக் களஞ்சியத்தை, அருள்  வளத்தைப்  பெறமுடியாது.   (பார்க்க 2:26, 41:23)

3. அல்குர்ஆனுக்கு  முக்கியத்துவம்  கொடுக்கவேண்டும்.

அல்லாஹ்விடமிருந்து வந்த மாண்பும், மதிப்பும், மகத்துவமும் மிக்க அல்குர்ஆன்  மிகமிக உயர்ந்தது என்பதை மனதில் இறுத்தி எல்லா நூல்களையும் விட அதிமுக்கியத்துவம் கொடுத்து அதனை வாசித்து, புரிந்து, சிந்திக்கவேண்டும். அதனுடன் நமது தொடர்பை, பிணைப்பை, உறவை வலுப்படுத்திப் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டும். தினம் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.  நிறுத்தி  நிதானமாக  படிக்கவேண்டும்.  (பார்க்க 73:4)

4. அல்குர்ஆன்  சொல்வதற்கேற்ப  மாறும்  வைராக்கியம்  வேண்டும் :

நமது எண்ணம் அல்குர்ஆனின் எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக இருந்தாலும் கூட நமது உள்ளத்தையும், செயல்களையும் அல்குர்ஆனுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திடமான வைராக்கியம் வலுவாக இருக்க வேண்டும். அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். அல்குர்ஆன் கூறும் அனைத்தையும் எவ்வித தயக்கமோ, ஐயமோ இன்றி ஏற்று நடக்க வேண்டும். அல்குர்ஆன் நமது உயிருடன்,  இரண்டறக் கலக்க வேண்டும்.  (பார்க்க: 29:69)

5. ஆராய்ச்சி  செய்யும்  மனப்பான்மை  வேண்டும் :

மனதை மூடி, கண்களை, காதுகளைத் திறந்து தன்னை படிக்கும்படி அல்குர்ஆன் சொல்கிறதா? இல்லையே. ஆராயும் மனப்பான்மை கொண்டு, சிந்தனையைச் செலுத்தி கவனத்துடன் கருத்தூன்றி படிக்கவே அல்குர்ஆன் அறிவுறுத்துகின்றது. ஆனால், நாமோ கடிவாளம் பூட்டப்பட்ட  குதிரை போல அல்குர்ஆனை ஓதுகின்றோம் படித்து, சிந்தித்து ஆராயவேண்டும் என்பதையே நம்மிடம் அல்குர்ஆன் எதிர்பார்க்கிறது.  (பார்க்க: 14:52, 47:24, 54:40)

6. ஷைத்தான் ஏற்படுத்தும் தடைகளை, இடையூறுகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல்  தேடவேண்டும் :

அல்லாஹ்வின் அருட்கொடையான அல்குர்ஆன் மூலம் நாம் நேர்வழியில் நடக்க முற்படும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு தடைகளை, இடர்களை ஏற்படுத்த ஷைத்தான் உறுதி கொண்டிருக்கிறான். அல்லாஹ்விடமும் வாக்குறுதி வாங்கியிருக்கிறான். நம்மை விட பல மடங்கு பலசாலியான, மறைந்துத் தாக்கும் பகிரங்க விரோதியான ஷைத்தானின் முட்டுக்கட்டைகளைத் தகர்க்க அல்லாஹ்வின் துணை வேண்டும். ஆகவே, அல்லாஹ்விடம்  பாதுகாவல்  தேடவேண்டும்.     (பார்க்க : 7:16,17, 16:98)

17. அல்லாஹ்விற்கு  நன்றி  செலுத்தவேண்டும் :

நேர்வழியை. மிக உயர்ந்த அருட்கொடையை, மதிப்புமிக்க கருவூலத்தை, அறிவுக் களஞ்சியத்தை, இறைநூலை (அல்குர்ஆனை) தந்த அல்லாஹ்வைப் புகழ்ந்து  நன்றி  செலுத்த வேண்டும்.   (பார்க்க : 2:152, 7:43, 14:7)

8. அல்குர்ஆனை  செவி  தாழ்த்தி,  கவனம்  செலுத்திக்   கேட்க வேண்டும் :

இறைநூலை நாம் படிக்கும்போதும் அல்லது மற்றவர்கள் படிப்பதைக் கேட்கும்போதும் செவிகளை தாழ்த்தி, கவனம் செலுத்திக் கேட்கவேண்டும். உள்ளம் ஓர்மையுடன் அலைபாயாமல் இருக்க முழுமுயற்சி  எடுக்க  வேண்டும்.   (பார்க்க 7:204, 5:37)

9. அல்லாஹ்வின் பேச்சை அல்குர்ஆனை வாசிக்கும்போது  பதிலளிக்க  வேண்டும்:

அல்குர்ஆனில் சொர்க்கம் பற்றி வரும்போது அல்லாஹ்விடம் சொர்க்கத்தை வேண்டியும்; நரகம் பற்றி வரும் இடங்களில் நரகத்தை விட்டு பாதுகாப்பையும்; துஆக்கள் வரும்போது ஆமீன் கூறியும்; வாக்குறுதி, கட்டளை, எச்சரிக்கைகள் வரும்போது தக்க இடங்களில் ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், அஸ்தஹ்பிருல்லாஹ் போன்றவற்றை  சொல்லியும்  அல்லாஹ்விடம்  உரையாட  வேண்டும்.

10. துஆ  செய்ய  வேண்டும் : 

குர்ஆனின் சீரிய கருத்துகளை நாம் விளங்கி, அவை நமக்குப் பலனளிக்க, அல்லாஹ்வை நாம் சார்ந்திருந்து அவனிடம் நேரிய வழியைத் தா! என்று மன்றாடி துஆ செய்யவேண்டும்.
(
பார்க்க: 3:8, 28:24)

அல்குர்ஆன் வசப்பட கீழ்க்காணும் துஆவை ஓதுக: யா அல்லாஹ்! நான் உன் அடிமை; உன் அடிமையின் மகன், என் நெற்றி உன் கைப்பிடிக்குள்! என் மேல் நிலவுவது உன் ஆதிக்கமே! என்னைப் பற்றிய உனது தீர்மானமே சத்தியமானது, வாய் மையானது. உனக்கென்றே உள்ள, உன் னையே நீ அழைத்துக் கொள்கின்ற, உனது நூலில் நீ இறக்கியுள்ள, உனது படைப்பினங்களில் யாருக்கேனும் நீ கற்றுக் கொடுத்திருக்கின்ற உனது ஒவ்வொரு தூய பெயர்களின் துணை கொண்டு உன்னிடம் கேட்கிறேன். குர்ஆனை எனது உள்ளத்தின் வசந்தமாக, என் நெஞ்சத்தின் பிரகாசமாக, எனது துயரத்திற்கு விடுதலையாக, எனது சிந்தனைக் குழப்பத்திற்கு நிவாரணமாக ஆக்கி விடுவாயாக!  (அல்முஅத்தா, முஸ்னத் அஹ்மத்)

நாம் ஈடுபாடு காட்டி அல்குர்ஆனோடு ஒன்றிவிடும்போது நமக்கு ஈமானின் சுவை அதிகரிக்கும்.  அதனால்  நற்செயல்களை  அதிகம்  அதிகம்  செய்வோம்.   (பார்க்க : 8:2)

அல்குர்ஆனோடு நமக்குள்ள தொடர்பு எப்போது நெருக்கமாக, மிக மிக நெருக்கமாக ஆகிறதோ அப்போது நாம் நன்மைகளின் இருப்பிடமாக; நற்செயல்களின் நிலைக்கள்ளாக; தீமைகளை, அநீதிகளைத் தவிர்ப்பவர்களாக, அவைகளை எதிர்ப்பவர்களாக மாறுவோம். அல்குர்ஆனைப் பற்றிப்  பிடித்தால்  இம்மாற்றம்  அல்லாஹ்வின்  அருளால்  நிகழ்ந்தே  தீரும்.

அல்குர்ஆனை செயல்படுத்துவதில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். திருக்குர்ஆனின் செயல்வடிவமாக, இயங்கும் குர்ஆனாக அவர்களின் வாழ்க்கைத்  திகழ்ந்தது.  அதனால்தான்,

இறைத்தூதரின் குணம் எவ்வாறிருந்தது? என்று கேட்டபோது, அவரின் துணைவி ஆயிஷா(ரழி) அவர்கள் நபிகளாரின் குணம் அல்குர்ஆனாகவே இருந்தது என்று பதில் கூறினார்கள்.     (முஸ்லிம்)

நமது வாழ்க்கை அல்குர்ஆனின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும் என்று அல்லாஹ்விடம் துஆ செய்வோம்! நமது வாழ்வு அல்குர்ஆனாக மாற முயற்சி எடுப்போம்!! அல்லாஹ் நல்லருள் புரிவானாக!  ஆமீன்.  அல்ஹம்துலில்லலாஹ்.

Previous post:

Next post: