வெற்றி (நஜாத்) என்பது எது?
A.N. TRICHY.
எல்லோரும் விரும்புவது வெற்றிகரமான வாழ்க்கையைத்தான். இதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்காது. ஆனால் பெரும்பாலோர் வெற்றி என்னும் முயற்சியில் முழுமையாக முயலாமல் விரக்தியுற்று, சலிப்படைந்து, அல்லது பிரச்சனைகளை சந்திக்க பயந்து வெற்றியை அடைய முடியாமல் பெரும்பாலோர் தோல்வியை தழுவுகிறார்கள்.
அதுவே யாரெல்லாம் எடுத்த காரியத்தில் எப்படியும் வெற்றியின் சிகரத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்களோ அவர்களே “வெற்றி‘யை (நஜாத்தை) அடைகிறார்கள்.
ஆனாலும் வெற்றியை அடைய கடுமையாக முயற்சி செய்தும் பலருக்கு வெற்றி கிடைப்பது இல்லை. அது ஏன்?
இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
கிராமத்தில் வேலை கேட்டு வந்த ஒரு இளைஞனுக்கு அந்த கிராமத்தில் வசிக்கும் தோப்புக்கு சொந்தக்காரன் வேலை கொடுத்தான். தோப்பில் தேவையற்ற மரங்களை எல்லாம் வெட்டி எறியவேண்டும் என்பதுதான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு ஒரு கூர்மையான கோடாரியையும் கொடுத்தான்.
இளைஞன் உற்சாகமாக வேலையில் ஈடுபட்டான். முதல் நாள் எட்டு மரங்களை வெட்டினான், இரண்டாம் நாள் ஏழு மரங்களை வெட்டினான். இவ்வாறாக ஒவ்வொரு நாளும் அவன் வெட்டிய மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. ஒருநாள் தோப்புக்கு சொந்தக்காரன் அவன் எப்படி வேலை செய்கிறான் என்பதை பார்ப்பதற்காக அங்கே வந்தான். ஆனால் அந்த இளைஞன் வியர்வையை துடைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான், காலையிலிருந்து ஒரு மரம் கூட வெட்டவில்லை.
ஏன்? என்று கேட்டான்.
எனக்கும் அதான் புரியவில்லை, ஐயா: நீங்கள் கொடுத்த அதே கோடாரியைக் கொண்டுதான் வெட்டுகிறேன். அப்படியும் என்னால் மரங்களை வெட்ட முடியவில்லை என்றான் அந்த இளைஞன்.
தோப்புக்காரன் கேட்டான்; ஏன் தம்பி, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தபோது இடையிடையே கொஞ்ச நேரம் கோடாரியை திட்டினாயா?
இல்லை ஐயா, என்றான்.
தோப்புக்காரன் சொன்னான். “தம்பி நீ ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், கடுமையாக வேலை செய்தால் மட்டும் போதாது, புத்திசாலித்தனமாக வேலை செய்யவேண்டும் அதுதான் முக்கியம்.
பலரும் வெற்றிக்காக இப்படித்தான் பாடுபடுகிறார்கள். ஆனால் வெற்றி என்பது கடுமையாக உழைக்கிறோமா அல்லது புத்திசாலித்தனமாக உழைக்கிறோமா என்பதை பொருத்தே உலகில் வெற்றி கிடைக்கிறது. அதுவே மறுமை வெற்றி என்பது,
இறை நம்பிக்கையின் மூலமும்,
இறைவனின் (கட்டளைக்கு) கீழ்படிதல் மூலமும்.
இறைவனுக்காக செய்யப்படும் நற்செயல்கள் மூலமும். கிடைக்கும் வெற்றியே உண்மையான “வெற்றி‘ ஆகும்.
எனவேதான் இறைவா தன் வழிகாட்டும் நூலில்(குர்ஆனில்) நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால்,
இறை நம்பிக்கையாளர்களே!
பொறுமையைக் கைக்கொள்வீராக! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! எப்பொழுதும் விழிப்புணர்வுடனும், ஒற்றுமையுடனும் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி வாழ்வீர்களாக! இதனால் மட்டுமே வெற்றியாளர்களாகத் திகழக் கூடும்! (அல்குர்ஆன் 3:200)
மற்றொரு வசனத்தில் “தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நீங்கள் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளை தேடுங்கள். மேலும் எல்லா காரியங்களிலும் அல்லாஹ்வின் நினைவுடன் செயல்படுங்கள். அப்பொழுது நீங்கள் வெற்றி பெறுவீர்கள்‘. (அல்குர்ஆன் 62:10)
மேற்கண்ட இரண்டு வசனங்களில் வெற்றி கிடைக்க வேண்டுமானால்,
பொறுமை வேண்டும்,
அசத்தியத்தையும், அசத்தியவாதிகளையும் எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஒரு சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்ல வேண்டுமானால் விடாமுயற்சியும், கொள்கையில் நிலைத்திருப்பதும், ஒருவருக்கொருவர் இணைந்து ஒளிவு மறைவு இன்றி தோழமை உணர்வுடனும், ஒருமித்த கருத்தோடும் செயல்பட வேண்டும்.
அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்ற வேண்டும். அதே வேளையில் நீங்கள் உழைப்பின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடையை பெற முயற்சி செய்ய வேண்டும்.
மேற்கண்டவைகளே உண்மையான (மறுமை) வெற்றிக்கான வழிகளாகும்.
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் வெற்றியைத் தருவாயாக; மறுமையிலும் வெற்றியைத் தருவாயாக; இன்னும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காத்தருள்வாயாக! (அல்குர்ஆன் 2:201)