பல்சமயச் சிந்தனை!

in 2024 அக்டோபர்

பல்சமயச் சிந்தனை!

ஆசிரியர் குழு

கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (30.10.1984) அன்று மர்ஹும் அபூ அப்தில்லாஹ் () K.M.H. ஷாஹுல் அமீது அவர்கள் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் & என்ஜினியரிங் வியாபாரிகள் திருச்சி சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில்சமயங்களால் சமூகத்தில் ஏற்படுள்ள சாதக பாதகங்கள்என்ற தலைப்பில் மர்ஹும் அபூ அப்தில்லாஹ் ஆற்றிய பேருரை பின்பு நூல் வடிவத்தில்பல்சமயச் சிந்தனைஎன்ற பெயரில் வெளி வந்து தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி உண்டாக காரணமாக இருந்ததில் முக்கிய பங்கு உள்ளது.

தமிழகத்தில் பல்வேறான கருத்தில் எத்தனையோ இஸ்லாமிய நூல்கள் அன்றும் இன்றும் வெளி வந்தும், வந்துகொண்டும் இருக்கிறது.

ஆனால் தமிழக வரலாற்றில் பாமர மக்கள் முதல் படித்த மார்க்க அறிஞர்கள் வரை பெரும் தாக்கத்தையும், பலருடைய வாழ்க்கையில் விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டது. இந்தபல்சமயச் சிந்தனைஎன்ற ஒரு நூலால்  மட்டுமே.

அந்த நூலின் மையக் கருத்து உலக மக்கள் அனைவரும் சகோதர, சகோதரிகளே என்பதும், மதத்தின் பெயரால் மதகுருமார்கள் பிரிவை ஏற்படுத்தி மற்றும் அவர்கள் செய்யும் பொய், பித்தலாட்டத்தை தோலுறித்து காட்டியது. அவருடையபல்சமயச் சிந்தனைநூலின் தாக்கத்தால் சுன்னத் வல் ஜமாத் தவ்ஹீத் & மதகுருமார்கள் அவர் வாழ்ந்த காலம் முழுவதும் அவருக்கு கொடுத்த துன்பமும், துயரமும், ஏச்சும், பேச்சும்  ஏராளம்.

ஆயினும் எதற்கும் எவருக்கும் அடி பணியாது, வளைந்து கொடுக்காது கொண்ட கொள்கை யில் நிலைத்து வாழ்ந்து மறைந்தாலும் அவருடைய பேச்சுக்கள், எழுத்துக்கள் இன்றும் சுமார் 40 ஆண்டுகளை கடந்தும்அந்நஜாத்என்ற இலட்சிய மாத இதழ் மூலம் மக்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. அல்ஹம்திலில்லாஹ். 

எந்தவித லாப நோக்கமின்றிஅந்நஜாத்தை நடத்துகிறோம். மேலும், கட்டுரையாளர்கள், வாசகர்களின் ஆதரவும் அல்லாஹ்வின் கிருபையும், உதவியும் இருக்கின்றது. இனியும் இப்பணி தொடர துஆச்  செய்ய வேண்டுகிறோம்.

மேலும் சமீப காலமாக தொய்வு அடைந்து பல பிரிவுகளாக ஆன அழைப்பு பணி எழுச்சி வீறு நடைபோட இயக்கம், கலகம் போன்ற சீர்கேடுகளைகளையவும், பிரிவுக்கும், புரோகிதத்திற்கும் மார்க்கத்தில் இடம் இல்லை என்பதை நினைவு கூறிபல்சமயச் சிந்தனைநூலின் கருத்துக்களை வாழும் தலைமுறையும், வருங்கால தலைமுறையும் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாதம் (அக்டோபர் 24) முதல்அந்நஜாத்தில் தொடராக வெளியிட முடிவு  செய்துள்ளோம்.     

இப்படிக்கு,

ஆசிரியர் குழு

குறிப்பு : “பல்சமயச் சிந்தனைநூலின் முழு பிரதியும் வேண்டுவோர் வாட்ஸ்ஆப் மூலம், பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர் முகவரியை தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும் என்பதையும்  மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.

அவைத் தலைவர் அவர்களே!

ஆற்றல்மிகு அறிஞர் பெருமக்களே!

நீங்கள் அனைவரும் என் சகோதரர்கள். இந்த அடிப்படையில் நானும், நீங்களும் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த ஒரே இறைவன், நமக்காகக் கொடுத்திருக்கும் நேரான, சரியான, தெளிவான, மார்க்கத்தைக் காட்டியருள அவனை மனதாலும், உடல் மொழியாலும் பிரார்த்தித்து எனது உரையைத்  தொடங்குகின்றேன்.

இங்கு இறைவனை மறுக்கும் நாஸ்திகர் களோ இறைவனோ மறுமையோ இல்லை. இவ்வாறு சமூகத்தில் ஒழுக்கம் கட்டுப்பாடு நிலைக்க நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்று சொல்பவர்களும் இல்லை. அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் இறைவனையும், மறுமையை யும் முழுமையாக நம்பி செயல்படுபவர்கள் என்ற நம்பிக்கை யோடு, நாஸ்திகர்களுக்குரிய விளக்கத்தை விட்டு, ஆஸ்திகர்களுக்குரியதையே பேசுவேன்.

மக்கள் அனைவரும் சகோதரர்களே!

இது உங்களுக்கு வியப்பைத் தராது. நம் தலைமுறைகளைப் பின்நோக்கிக் கணக்கிட்டால், ஒருவர் நம் அனைவருக்கும் தந்தையாக இருப்பார். எனவே நம் சகோதரத்துவ ஒற்றுமை என்றும் நிலைக்குமாக.

மூன்று முக்கிய சிந்தனைகள்:

எனது உரையைத் தொடங்கும் முன் மூன்று செய்திகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

1. உலக வாழ்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும் :

இவ்வுலகில் படிப்பு, பதவி, வியாபாரம், விவசாயம், வழக்கு இவற்றில் நம் கவனக் குறைவால், அறியாமையால் தோல்வியோ, இழப்போ ஏற்பட்டால், அவற்றைப் படிப்பினையாக  வைத்து, இரண்டாவது முறையோ பல முறைகளோ முயற்சி செய்து, தோல்வியை வெற்றியாக மாற்ற லாம். இழப்பை இலாபமாக ஆக்கலாம். சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆனால் நாம் நம்பும் மறுமையைப் பொறுத்தமட்டில், இரண்டாவது சந்தர்ப்பமே இல்லை. ஒரே முயற்சியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லை என்றால், மாற்ற முடியாத, மீட்க முடியாத, இழப்பாக அது நம்மை நரகில் கொண்டு சேர்த்துவிடும். இதை மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.

2. கேள்விக்குரிய விடையாக இல்லை என்றால்?

இறைவன் நம்மிடம் எதை ஏவி இருக்கிறானோ அதை மட்டுமே நாம் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் செய்தது என்பதற்காக ஒன்றைச் செய்து, அதைக் கொண்டு மோட்சம் அடையலாம் என்று மனப்பால் குடிக்கக்கூடாது. தேர்வில் மாணவன் கேட்கப்பட்ட கேள்விக்கு அரை குறையாக எழுதினாலும் மதிப்பெண் உண்டு. கேட்கப்படாத கேள்விக்கு அது பாடத் திட்டத்தில் இருந்தாலும், 100க்கு 100 கிடைக்கும் அளவுக்குத் திறமையாக எழுதினாலும், கிடைப்பது பூஜ்யமே. இறை வனால் ஏவப்படாததைச் செய்வதால், சுவர்க்கம் கிடைக்காது. இதையும் மனத்தில் பதித்திக்  கொள்ள  வேண்டும்.

3. மார்க்க விசயத்தில் முன்னோர்களைப் பின்பற்றுவது  அறிவுடைமையா?

முன்னோர்களின், அறிஞர்களின் இவ்வுலக அனுபவம் ஆற்றல் எல்லாம் நமக்குப் பயன்படலாம். காரணம் அனுபவம், ஆற்றலை இலாப, நஷ்டமாக உலகிலேயே சந்தித்து அடைகிறார்கள்; கண்கூடாகப் பார்க்கிறார்கள், மறுமையை அடைந்து இலாப, நஷ்டத்தைப் பார்த்தவர்கள் இல்லை. மறுமை விசயத்தில் மனிதனின் ஆற்றல், அறிவு செல்லாது. இதில் இறைவன் எதைச் சொல்கிறானோ, அதை ஏற்று அப்படியே செயல்படுவதே அறிவுடைமை யாகும். ஆகவே (மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதில், மனிதன் தன் அறிவு ஆற்றல், அனுபவம் இவற்றை நம்பி செயல்படவும் கூடாது; மற்றவர்களுக்கு அதைப் போதிக்கவும் கூடாது; மற்றவர்கள் அவர்களின் போதனையை ஏற்றுக்கொள்ளவும் கூடாது. முன்னோர்களைப் பின்பற்றுவது விஞ்ஞான அடிப்படையில் முன்னேற்றத்தைத் தரலாம். மார்க்க  விசயத்தில்  தோல்வியையே அது  தரும்.

அடுத்து, எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள, “மதங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்என்ற தலைப்பில் பேச முற்படுகிறேன்.

மதம் என்றால் என்ன?

மதம் என்றால் வெறி, சம்மதம் என்ற அடிப்படையில், மனிதன் அவனாகச் சம்மதித்துச் சரி கண்டு ஏற்றுக்கொண்ட ஒரு வழி என்றே சொல்லமுடியும். சுருங்கச் சொன்னால், மனிதனை மதம் மதங்கொள்ளச் செய்வது; இறைவனால் கொடுக்கப்பட்டதன்று. இறைவனால் கொடுக்கப்பட்ட மார்க்கம். மனிதன் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும், சரிகண்டாலும், சரிகாணாவிட்டாலும் ஏற்று நடக்க வேண்டியது ஆகும். இறைவனே பல மதங்களைக் கொடுத்திருந்தால், அவனை எப்படி இறைவனாக நாம் ஏற்றுக்கொள்ளமுடியும்? இறைவனால் கொடுக்கப்பட்ட மார்க்கம், மனிதச் சமுதாயமே, நலமாக, அமைதியாக வாழும் வழியாகும். மனிதர்களால் சுயநல நோக்கோடு சுவீகரிக்கப்பட்ட மதங்களோ சில. பல சடங்குகளைக் கொண்டு, மோட்சத்தை அடையலாம் என்ற மூட நம்பிக்கையை, குருட்டு நம்பிக்கையை ஊட்டுபவையாகும். 

உதாரணமாக, ஆதி பிதா ஆதத்தையும், அவரது மனைவியையும் படைத்துச் சுவர்க்கத்தில் வாழ ஒரு மார்க்கத்தைக் கொடுத்தான் இறைவன். இது இறை தொடர்பான தாகும். சாத்தானின் தூண்டுதலினால் ஆதம் தன் சுய விருப்பத்திற்கு ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார். இது ஆதத்தின் சம்மதமாகும்; மதமாகும். ஆதம் கொண்ட மதம், இறைவனுக்குச் சினத்தை உண்டாக்கிச் சுவர்க்கத்திலிருந்து அவரை இவ்வுலகிற்கு  விரட்டியது.

இங்கு அவருக்கும், அவரது சந்ததியினருக்கும் ஒரு மார்க்கத்தை இறைவன் கொடுத்தான்; இறைவன் கொடுத்த மார்க்கப்படி நடப்பவர், இறை சம்மதத்துடன் மீண்டும் சுவர்க்கம் புகுவர் என்றும் அறிவித்தான் இறை மார்க்கம்.

ஆதத்தின் மக்களில் முன்னைய சூலில் பிறந்த ஆண், பின்னைய சூலில் பிறந்த பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்பதாகும். ஆதத்தின் மகன் காபிழோ தன் கூடப் பிறந்த சகோதரி யையே மணமுடிக்க விரும்பினான். இது காபிழின் சம்மதம்; மதமாகும், காபிழ் கொண்ட மதம், அவனது சகோதரன் ஹாபிழின் கொலையில் முடிந்தது. இவ்வாறு இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு, மனிதன் தன் சுய விருப்பத்தால், மனித அபிப்பிராயத்தால் ஒரு வழியை உண்டாக்கும்போது அது மதமாகி, மனிதனை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது. ஆகவே மதங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவை அல்ல என்பது விளங்கும். மனிதர்களால் கற்பனையாகச் சுயநல நோக்கோடு சுவீகரிக்கப்பட்டவை அவை என்பதைப் புரிந்து  கொண்டிருப்பீர்கள்.

இப்போது உங்களுக்கு, “அனைத்து மதங்களும் நன்மையைத்தானே ஏவுகின்றான். தீமையை ஏவவில்லையே? அவற்றைத் தவறானவை என்று எப்படிச் சொல்ல முடியும்?’ என்ற சந்தேகம் உண்டாகலாம். நன்மை, தீமைக்கு இலக்கணம் வகுக்கும் உரிமை இறைவனுக்கு மட்டுமே உண்டு; மனிதனுக்கு இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். தேர்வு எழுதும் மாணவர் களிடமே, கேள்வித்தாள் தயாரிக்கும் உரிமையைக் கொடுத்தால், குற்றவாளிக்கே தீர்ப்பு அளிக்கும் உரிமை கொடுத்தால் எவ்வகைக் கேடுகள் விளையுமோ, அவற்றை விடப் பெருங்கேடுகள் இதனால் விளையும்.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: