முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் உள் சண்டைகள்!
அபூ அப்தில்லாஹ்
மறுபதிப்பு :
முஸ்லிம்களின் இன்றைய இழிநிலை ஏன்?
முஸ்லிம்களின் இன்றைய இழிநிலைக்கு ஒன்று அவர்கள் குர்ஆனைக் கைவிட்டது. இரண்டாவது முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் உள் சண்டைகள் என்று 1920ல் அறிஞர், ஷைகுல் ஹிந்த் என்று அழைக்கப்பட்ட மஹ்மூத் அல்ஹஸன் அவர்கள் கூறிச் சென்ற இந்த இரண்டு கருத்துக்களும் நூற்றுக்கு நூறு உண்மை. முஸ்லிம்கள் குர்ஆனை கைவிட்டதின் பேரழிவுகளை பிரிதொரு கட்டுரையில் விளக்கி இருக்கிறோம். இங்கு முஸ்லிம்களிடையே நடைபெறும் உள் சண்டைகள் பற்றிப் பார்ப்போம்.
முஸ்லிம்களிடையே காணப்படும் உள் சண்டைகள் காரணமாக அல்லாஹ் ஒரே சமுதாயம் (உம்மத்தன் வாஹிதா) என்று சிறப்பித்துக் கூறும் முஸ்லிம் சமுதாயம் இன்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். (பார்க்க: 21:92,93) இதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய குர்ஆனை கைவிட்டு, மவ்லவி புரோகிதர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதே புரோகிதர்கள் தங்களின் வாழ்க்கைக்குரிய வழியாக புரோகிதத்தை வரித்துக் கொண்டுள்ளதால், பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டே அவர்கள் முஸ்லிம்களிடையே ஆதிக்கம் செலுத்த முடியும். பல பிரிவுகளாகப் பிரிப்பதுடன் அவர்கள் ஓய்ந்து விடுவதில்லை; மகிழ்ச்சி அடைவ தில்லை. ஒரு பிரிவினர் மற்றும் பிரிவினர் மீது வெறுப்பையும், பொறாமையையும், இகழ்ச்சியையும் காட்டக்கூடிய அளவுக்கு இந்தப் புரோகிதர்கள் துர்போதனை செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஒரு பிரிவார் மற்றொரு பிரிவாரை காஃபிர், முஷ்ரிக், அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்றெல்லாம் அப்பாவி முஸ்லிம்களின் உள்ளத்தில் நஞ்சைக் கலந்து விடுகின்றனர். இதனால் வெறுப்பும் துவேசமும் அதனால் பிரிவுகளும் ஏற்பட்டுக் கொண்டே செல்கின்றன. ஆக முஸ்லிம்களிடையே உள் சண்டைகளும், அதனால் பிரிவுகளும் ஏற்பட மூலகர்த்தாக்கள் இந்த மவ்லவி புரோகிதர்களே. அவர்களின் தவறான ஃபத்வாக்களை, தீர்ப்புகளை அப்படியே கண்மூடி ஏற்று முஸ்லிம்கள் சீரழிகின்றனர்.
வழிகேட்டின் இரு துருவங்கள் :
முஸ்லிம்களில் ஒரு சாரார் வழிகேட்டின் வடதுருவத்தில் இருந்தால் இன்னொரு சாரார் வழிகேட்டின் தென்துருவத்தில் இருக்கின்றனர். மற்றபடி குர்ஆன், ஹதீத் போதிக்கும் நடுநிலையை எடுத்து நடக்கும் முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு.
வழிகேட்டின் வட துருவத்தினர்:
முஸ்லிம்களில் ஒரு சாராரின் நடைமுறைகள் எப்படி இருக்கிறதென்றால் குர்ஆன், ஹதீத் அடிப்படையில் பெருங்குற்றங்களாக இருப்பவற்றை மட்டுமே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். அதுவே 3:110, 9:71, 103:1-3 போன்ற இறைக்கட்டளைகள் கூறும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் காரியத்தைச் செய்வதாகும். மற்றபடி சில்லறை விசயங்களை கைகளை நெஞ்சில் கட்டுதல், கைகளை நான்கு இடங்களில் தூக்குதல் (ரஃபயல்பயதைன்) இருப்பில் கிபுலாவை நோக்கி கை விரலை நீட்டிச் சுட்டிக் காட்டுதல் (இஷாரா), 7:55 இறைக் கட்டளைப்படி கூட்டு துஆவை தவிர்த்தல், தொப்பிப் போட்டும் தொழலாம், தொப்பி இன்றி யும் தொழலாம் இரண்டிற்கும் அனுமதி உண்டு. இப்படிப்பட்ட சில்லரை விடயங்களை எடுத்துச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றாலேயே சண்டைகளும், பிளவுகளும் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர். மத்ஹபுகளை குறை கூறுவதாலும் முஸ்லிம்களி டையே பெரும் சண்டைகள், கலவரங்கள் ஏற்படுகின்றன. அவை பற்றியும் கூறக் கூடாது என்கின்றனர்.
தெள்ளத்தெளிவான குர்ஆன் வசனங்களிலேயே கருத்து வேறுபாடு:
குர்ஆன், ஹதீதில் நேரடியாகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களில் கருத்து வேறுபாடு இல்லவே இல்லை. குர்ஆன், ஹதீதில் தெளிவுபடுத் தப்படாத விசயங்களில்தான் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்று தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகின்றனர். இந்த வாதம் பிற்காலத்தில் புரோகித முல்லாக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பனைக் கட்டுக்கதையே அல்லாமல் குர்ஆன், ஹதீதுக்கு உட்பட்ட நல்ல கருத்து அல்ல.
மத்ஹபுகள் 3:19,85, 5:3, 7:3, 33:36,66, 67,68, 42:21 மேற்படி வசனங்கள் மத்ஹபுகளை பின்பற்றுவது தவறு என்று நேரடி குர்ஆன் கட்டளைகளுக்கு முற்றிலும் முரணாக இருந்தும், நீண்ட காலமாக நடைமுறையிலிருப்பதைக் கொண்டும், அவர்கள் அறிஞர்களாக மதிக்கும் முன்னோர்கள், பெரியார்கள், நாதாக்கள் சரிகண்டு செயல்படுத்தியதை ஆதாரமாகக் காட்டியும், இன்று உலகில் வாழும் பெருங்கொண்ட முஸ்லிம்கள் மத்ஹபுகளைப் பின்பற்றி நடப்பதை ஆதாரமாகக் காட்டியும் மத்ஹபுகளை நியாயப்படுத்துகின்றனர். முன்னோர்களைப் பின்பற்றி நடப்பதைக் கண்டித்து 20க்கும் மேற்பட்ட குர்ஆன் வசனங்கள் இருந்தும், பெரும்பான்மையினர் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி நியாயப்படுத்துவதை 6:116 வசனம் நேரடியாகக் கண்டித்தும், இத்தனை குர்ஆன் வசனங்களைப் புறக்கணித்து விட்டு மத்ஹபுகளை நியாயப்படுத்துகின்றனர். இந்த லட்சணத்தில் குர்ஆன், ஹதீதில் நேரடியாகக் சொல்லப்பட்டிருப்பவற்றில் கருத்து வேறுபாடு இல்லை என்றும் சொல்லிக் கொள்கின்றனர். இது வினோதமாக இல்லையா?
மார்க்கத்தில் சிறிது பெரிது என்று நாமாக பாகுபாடு ஏற்படுத்தலாமா?
இதுபோல் சில்லறை விசயங்களைக் கண்டு கொள்ளக்கூடாது; அவை பற்றி எடுத்துச் சொல்லக் கூடாது என்பதற்கு அவர்களிடம் ஒரு ஆதாரமும் இல்லை; சொந்தக் கற்பனையையே கூறுகின்றனர். சொல்வதை தெளிவாக–நேரடியாகச் சொல்லுங்கள். (23:70) மற்றும் 5:67, 33:21,36, 59:7 போன்ற இறைக்கட்டளைகளுக்கு முரணான கூற்றாகும் இது. இப்படிச் சொல்பவர்கள் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி இதுதான் நபிவழி என்று ஒப்புக்கொண்ட விசயத்திலும் அதன்படி செயல்படத் தயாராக இல்லை.
உதாரணமாக தொழுகையில் கைகளைத் தொப்புளுக்குக் கீழ் கட்டுவதை அறிவிக்கும் ஹதீதின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அப்துர் ரஹ்மான் இப்னு இஷ்ஹாக் கூஃபி பொய்யர், அவர் அறிவிக்கும் இந்த ஹதீத் பலவீனமானது என்று சில ஹனஃபி பிக்ஹு நூல்களிலேயே எழுதப்பட்டுள்ளது. அதேபோல் “கையை உயர்த்த (ரஃபயல்யதைன்) கூடாது என்பது பற்றிய ஹதீத் பலவீனமானது‘ என்றும் ஹனபீ பிக்ஹு நூல்களில் எழுதப்பட்டுள்ளது. தேவ்பந்த் அகீதா (கொள்கை) உடைய மவ்லவிகளும், ஜமாஅத்தே இஸ்லாமிய மவ்லவிகளும் இதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.
ஆனால் நடைமுறைப்படுத்த மாட்டார்கள். கேட்டால் “நாம் இவற்றிற்கு மாறாகச் செயல்படும் ஹனஃபி முஸ்லிம்களிடையே அழைப்புப் பணி செய்கிறோம். ஆதாரப்பூர்வமான ஹதீதில் உள்ளதுபடி செயல்பட்டால் அவர்கள் நம்மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். நாம் கூறும் மற்ற நல்ல விசயங்களையும் ஏற்க மாட்டார்கள்; மறுத்து விடுவார்கள்‘ என்று காரணம் கூறுவார்கள்.
ஆக அல்லாஹ் 51:55ல் சொல்லுவது போல் “ஹிதாயத்‘ அல்லாஹ்விடம் இல்லை; தங்களின் ஆதாரப்பூர்வமான ஹதீத்களுக்கு முரண்பட்ட செயல்பாடுகள் மூலமே “ஹிதாயத்‘ கிடைக்கிறது என்கின்றனர். கைகளை உயர்த்துவது பற்றி தர்க்கம் செய்து கொண்டிருந்தால் எதிரிகள் கைகளையே வெட்டிச் சென்று விடுவார்கள்; மத்ஹபுகளைப் பற்றி தர்க்கம் செய்து கொண்டிருந்தால் தலைகளையே வெட்டிச் சென்று விடுவார்கள் என்று அழகாகப் பேசி தங்களின் குர்ஆனுக்கு, ஹதீதுக்கு முரண்பட்ட போக்கை தாங்களே மெச்சிக் கொள்வார்கள். ஆக இவர்கள் எதிரிகளுக்குப் பயப்படும் அளவிற்கு அல்லாஹ்வுக்குப் பயப்படுவதாக இல்லை. அல்லாஹ்வோ குர்ஆனில் “நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்; எதிரிகளுக்கு அஞ்சாதீர்கள்‘; என்று கூறுகிறான். (பார்க்க 3:175, 39:36)
உண்மை விசுவாசிகள் அல்லாஹ்வுக்கே அஞ்சுவார்கள்:
“ஷைத்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள்; நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.” (அல்குர்ஆன் 3:175)
இங்கு உண்மையான முஃமின்களே மக்களுக்குப் பயப்படாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுவார்கள் என்பதை அல்லாஹ் அழகாக எடுத்துக் கூறுகிறான்.
முஸ்லிம்களில் பிரதான கடமை தொழுகை; அத்தொழுகையிலேயே ஒன்றுபட முடியாதவர் கள் வேறு எதில் ஒன்றுபடப்போகிறார்கள் என்ற சாதாரண சிந்தனை கூட இந்த அறிவு ஜீவிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 4:59 இறைக்கட்டளைப்படி சொந்த யூகங்களையும், கற்பனைகளையும் கைவிட்டு, குர்ஆனுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீத்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்ற உயர் எண்ணம் இந்த அறிவு ஜீவிகளிடம் இல்லை. இந்த 4:59 வசனத்திலும் “நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் கட்டுப்படுங்கள்‘ என்றே அல்லாஹ் எச்சரிக்கிறான்.
3:175,4:59 இன்னும் இவைபோல் பல குர்ஆன் வசனங்களை உற்று நோக்கும்போது உண்மை யான விசுவாசிகள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைப்படி செயல்படுவார்கள். பெயரள விலுள்ள முஸ்லிம்கள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைகளை விட, மக்களின் நடைமுறை களில் இருப்பவற்றையும், மக்கள் விரும்பக்கூடியவற்றையும் சரிகண்டு அதற்கேற்றவாறு மார்க்கச் சட்டம் சொல்வார்கள் என்பது குன்றிலிட்ட தீபம் போல் விளங்குகிறது.
நபிமார்களும் தப்பவில்லை:
நபிமார்களுடைய காலத்தில் இந்தச் சிந்தனைப் போக்குள்ள அறிஞர்களுக்கும் நபிமார்களுக்கு மிடையில் கருத்து மோதல்கள், அதனால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதை அல்குர்ஆன் அழகுபட விவரிக்கிறது. மக்களின் நடைமுறையிலிருந்த வணக்க வழிபாடுகளை குர்ஆனின் கட்டளைக்கேற்ப மாற்றி அமைப்பதில், பெரும் சிரமம் இருக்கத்தான் செய்தது. மக்கள் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாகக் கடைபிடித்து வந்ததை விட்டுவிடத் தயங்கத்தான் செய்தார்கள். அன்றைய அறிஞர்களும் மக்களின் விருப்பத்திற்கேற்றவாறு குர்ஆனின் போதனைகளை நிராகரிப்பதுடன் நபியையும் அவ்வாறே நடக்க வலியுறுத்தினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் பணியை உறுதியுடன் செய்ய அல்லாஹ் 2:120,145, 5:48,49, 6:19,56,150, 11:12, 13:37, 17:39, 73,74,75, 18:28, 20:16, 23:71, 25:43, 33:1-3, 42:15, 45:18, 69:44-46 ஆகிய எண்ணற்ற வசனங்கள் மூலம் எச்சரித்து அவர்களின் பாதங்களை நிலைப்படுத்தி இருந்தால், நம்மைப் போன்ற சாதாரண மக்களை ஷைத்தானும், அவனது ஆதரவாளர்களும் எந்த அளவு அலைக்கழித்து அல்லாஹ்வின் கட்டளைகளான அல்குர்ஆனைப் புறக்கணிக்கச் செய்வார்கள் என்பதை ஒவ்வொரு அறிவு ஜீவியும் சிந்தித்து உணர்ந்து மக்களின் பின்னால் போவதைத் தவிர்க்க வேண்டும். அதுவே அவர்களுக்கு வெற்றியைத் தரும். மக்களையும் நரகை விட்டுக் காப்பாற்ற முடியும்.
அல்குர்ஆனின் எச்சரிக்கை :
“மக்களின் விருப்பத்திற்கேற்றவாறு இந்த (அறிவு ஜீவிகளும்) விரும்புவதால், அல்குர்ஆனின் சத்தியப் போதனையும் அதற்கேற்றவாறு இருக்குமானால் வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் சீர் கெட்டுப்போயிருக்கும். அதனால் அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை(குர்ஆனை) அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை(குர்ஆனை) புறக்கணிக்கின்றனர்‘ என்று அல்லாஹ் 23:71ல் இப்படிப்பட்ட அறிவு ஜீவிகளைக் கடுமையாகக் கண்டிக்கிறான். அறிவு ஜீவிகள் உணர்வு பெறுவதாக இல்லை.
சிறிய வியத்திலும் மாற்றுக் கருத்து கொள்ளலாமா?
அல்லாஹ்வின் கட்டளைகளிலும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளிலும் இவர்களாக பெரிது, சிறிது என்று பாகுபாடு உண்டாக்கி அவற்றில் சிலதை ஏற்று சிலதை நிராகரிக்கும் இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள்.
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசம் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார் கள்”. (அல்குர்ஆன் 33:36)
என்ற கடுமையான இறைவனது எச்சரிக்கையை ஓதி உணர்வார்களாக, அவர்கள் எந்த அளவு பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை விளங்குவார்களாக. எனவே குர்ஆனைக் கொண்டு ஆதாரபூர்வமான ஹதீத்களைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட செயல் சிறியதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அதில் மாற்றுக் கருத்துக்கொள்ள மார்க்கத்தில் இடமே இல்லை; அவற்றிற்கு முன்னால் சொந்த யூகங்களையும், இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான சந்தேகமான ஹதீத்களையும் தூக்கிப் பிடிப்பதை விட்டு விடவேண்டும். 4:59ல் கட்டளை யிட்டுள்ளபடி குர்ஆனின் பக்கமும் ஆதாரபூர்வமான ஹதீதின் பக்கமும் மீண்டுவிட வேண்டும். இதுவே விசுவாசமுடைய, அல்லாஹ் மீதும், மறுமை மீதும் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர்களின் செயலாக இருக்க முடியும். 4:59 இறைக்கட்டளையை அறிவு ஜீவிகள் அனைவரும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டால் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் தீர்ந்துவிடும்.