அல்லாஹ்வின் அருட்கொடையில் எது உயர்வானது?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் உங்களுக்காக (நமக்காக) அல்லாஹ் பயன்படச் செய்ததையும் (வசப் படுத்தி தந்துள்ளதையும்) தனது அருட் கொடைகளை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வாரி வழங்கியிருப்பதை யும் நீங்கள் காணவில்லையா?
அறிவோ
நேர்வழியோ
இறைநூலின் ஞானமோ இவை எதுவும் இன்றி அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்வோர் மனிதர்களில் (சிலர்) உள்ளனர். (அ.கு. 31:20)
மேற்கண்ட வசனப்படி இறைவன் நமக்கு எண்ணற்ற எண்ணிக்கையில் அடங்காத பலவற்றை அருட்கொடையாக வழங்கியும், வசப்படுத்தியும் தந்துள்ளான். ஆயினும் மனிதர்களில் சிலர் தர்க்கம் செய் கின்றார்கள். அதற்கு காரணம் இறைநூலின் (குர்ஆனின்) ஞானம் இல்லாததே. பொதுவாக மனிதர்களைப் பொருத்தவரை
அறிவு,
ஆரோக்கியம்,
அளவில்லா செல்வம்
இந்த மூன்றும் ஒருசேர பெற்றிருப்பது மிகப்பெரிய அருட்கொடையாக கருதப் படுகிறது.
ஆனால் இந்த மூன்றும் ஒருசேர பெற்றவர்கள் உலகில் மிக சிலரே. ஒன்றிருக்கும், மற்றொன்று இருக்காது. இதுவே எதார்த் தம். அதற்கு காரணம், இருப்பதை தொலைத்து விட்டு இழந்ததை தேடுவது தான்.
அதாவது இறைநூல் மூலம் கூறிய அறிவுரையையும், அவன் வழங்கிய செல்வத்தையும் கொண்டு ஆரோக்கியத்தை பேணாமல் அதை தொலைத்துவிட்டு இப்போ தேடுகிறார்கள். அதற்காக பல லட் சங்களையும் செலவிடுகிறார்கள். மேலும் தவறான சில மருத்துவத்தையும் பின்பற்று கிறார்கள்.
அல்லாஹ் வழங்கிய அருட்கொடையில்
அறிவா?
ஆரோக்கியமா?
அளவில்லாசெல்வமா?
என்று நாம் பார்ப்போமேயானால் மூன்றுமே முக்கியமானதுதான். ஆயினும் இந்த மூன்றில் எது உயர்வானது என்பதைப் பார்ப்போம்.
இதை பட்டிமன்றம் போல பொழுது போக்கிற்காக அல்லது படித்துவிட்டு கடந்து போவதற்காகவே நாம் இதை இங்கு கூறவில்லை.
இறைவன் தன் வழிகாட்டு நூலில் (குர்ஆனில்) மேற்கண்ட மூன்றையும் பற்றி பல வசனங்களில் கூறியுள்ளான்.
அறிவைப்பற்றியும்,
ஆரோக்கியத்தைப்பற்றியும்,
அளவில்லாசெல்வத்தைப்பற்றியும்
மேற்கண்ட மூன்றிலும் நன்மையும் உள்ளது, தீமையும் உள்ளது என்பதையும் இறைநூல் கூறுகிறது. ஆயினும் எது உயர்வானது?
அதை தெரிந்துக் கொள்ள நாம் முன்பே குறிப்பிட்ட (இறைவசனம் 31:20) இறை நூலின் ஞானம் தேவை.
அதாவது அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள இறைநூலின் ஞானம் (குர்ஆனை மொழி பெயர்ப்புடன் படித்தால் தான்) தெரிந்துகொள்ள முடியும்.
ஆக இறைநூல் எது உயர்வானது என கூறுகிறது என்றால் :
இறைவன் (அவன்) தான் நாடியோருக்கு ஞானத்தை கொடுக்கிறான். யாருக்கு ஞானம் வழங்கப்பட்டதோ அவர் அதிகமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். அறிவுடையோரைத் தவிர வேறு எவரும் சிந்தித்துப் படிப்பினை பெறமாட்டார்கள். (அ.கு. : 2: 269)
மேலும் அத்தியாயம் 3ல் வசனம் 7ல் அறிவுடையவர்களைப் பற்றி கூறியுள்ளான்.
மேலும் அத்தியாயம் 13ல் வசனம் 19ல் அறிவுடையவர்களே படிப்பினை பெறுவர் என்று கூறியுள்ளான்.
அதே வேளையில் அறிவு இல்லாத விசயத்தை பின்தொடரக் கூடாது என்பதையும் கூறியுள்ளான்.
“உமக்கு (நமக்கு) எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை பின் தொடராதீர்! (ஏன் என்றால்) செவி, (காது) பார்வை (கண்), உள்ளம் இவை ஒவ்வொன்றும் அது குறித்து விசாரிக்கப்படும்.’ (அ.கு.: 17:36)
எனவே உயர்வான அருட்கொடையை பெற இறைவன் தன் வழிகாட்டி நூலில் (குர்ஆனில்) கற்றுக் கொடுத்த துஆவை நாம் கேட்போம்.
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக‘ (அ.கு. 20:114)
1. எங்களை நேர்வழியில் நடத்துவாயாக.
2. எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக.
3. எங்களுக்கு இவ்வுலகிலும் நற்பாக்கியம் தந்தருள்வாயாக, மறுமையிலும் நற்பாக்கியம் தந்தருள்வாயாக.
4. எங்களுக்கு உன் அருட்கொடைகள் அனைத்தையும் வழங்குவாயாக.
5. எங்களுக்கு நல்ல சந்ததிகளை கொடுத்தருள்வாயாக.
6. எங்களை முஸ்லிமாக வாழச் செய்து உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கும் நிலையில் எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக.