மழை! வரமா? சாபமா?

in 2024 நவம்பர்

தலையங்கம் :

மழை! வரமா? சாபமா?

தற்பொழுது மீடியாக்கள் மூலம் முக்கிய செய்தியாக இருப்பதுமழையைப் பற்றியதாகவே உள்ளது. அதில் மிகைப்படுத்தப்பட்ட செய்தியும் உண்டு, மறைக்கப்பட்ட செய்திகளும்  உண்டு.

எனவே மழையைப் பற்றி மனித அறிவும், இஸ்லாம் மார்க்கமும் என்ன சொல்கிறது  என்பதைப்  பார்ப்போம்.

பொதுவாக உலக நாடுகள் முழுவதும் மழைக்காலம், குளிர்காலம், கோடைகாலம் ஒரேமாதிரியாக இருக்கின்றதா என்றால் இல்லை. சில நாடுகளில் குறிப்பிட்ட காலங்கள் மட்டும் முறையாக மழை பெய்யும், சில நாடுகளில் வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ பெய்யும். அல்லது மழை பெய்யா மலேயே போவதும் உண்டு. வேறு சில நாடு களில் வருடம் முழுவதும் ஒரே நாளில் பல முறை பெய்வதும் கூட உண்டு. அதுபோல் வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட மழையால் பாதிப்பு அடைந்தது உண்டு. மேலும் மிக சமீப காலமாக மக்கா, மதீனா மற்றும் பல அரபு நாடுகளில் கூட வழக்கத்திற்கு மாறாக அதிகமாக மழை பெய்ததையும்  கண்டோம்.

அதுபோல் நமது நாட்டிலும் மிக சமீபத்தில் (ஆகஸ்ட் 2024) கேரளாவில் உள்ள வயநாட்டிலும், சென்ற வருடம் (2023) டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி போன்ற பகுதிகள் வெகுவாக மழையால் பாதிக்கப்பட்டது. அதன் விளைவு மழையை கண்டாலே பயமும், பதற்றமும் மக்களிடையே நிலவுகிறது.

ஒவ்வொரு வருடமும் நமது நாட்டில் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை மழை காலமாக இருப்பதை அறிவோம். அதுவே சில காலங்களில் மழை வராதா என ஏங்குவதும் உண்டு, அது மட்டுமல்ல மழை வேண்டிமழை தொழுகை  கூட  நடப்பதும்  உண்டு.

மழை காலங்களில் பல்வேறான முன் ஏற்பாடுகளை மக்களும், அரசும் செய்வதும் உண்டு, தவறுவதும் உண்டு, வானிலை அறிக்கையின்படி சில நேரங்களில் நடப்பதும் உண்டு,  நடக்காமல்  போவதும்  உண்டு.

கோடை காலத்தின் வெயில் தாக்கத் தினால் இறந்தவர்களை விட மழை காலத்தில் மாண்டவர்களே அதிகம். இது இறைவனின் கோபத்தினால் ஏற்பட்டதும் உண்டு, மனித கரங்களால் உலக ஆதாயங்களுக்காக முறை யாக ஆறு, குளங்களை மற்றும் நீர்த் தேக்கங் களை சரியாக பராமரிக்காத காரணத்தினால் ஏற்பட்டதும்  உண்டு.

ஆக இதுவரை மழையைப் பற்றி பொதுவான கருத்தை பார்த்தோம். அதுவே இறைநூல் (குர்ஆன்) மழையைப் பற்றி என்ன சொல்கிறது  என்பதை  இனி  பார்ப்போம்.

அதாவது மழை எவ்வாறு உருவாகிறது, இறக்கப்படுகிறது. அதன் பயன்கள் என் னென்ன என்பதை கீழ்க்கண்ட வசனம் தெளிவாக  கூறுகிறது.

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றைச் சுமந்து கொண்டு கடலில் ஓடும் கப்பல் களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் மழையை இறக்கி அதன் மூலம் பூமியை, அது இறந்த பின்பு (வறண்ட பின்பு) உயிர்ப்பிப்பதிலும், அதில் அனைத்து உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்கு மிடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்தாலும் நாம் மழையை பெய்யச் செய்கின்றோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.”   (.கு. 2:164)

அது மட்டுமல்ல, மழையைக் கொண்டு சில சமுதாயம் அழிக்கப்பட்டதையும் இறைவன்  கூறுகிறான். பார்க்க வசனம் : 25:37, 26:173, 54:11  (நூஹுடைய  சமுதாயம்)

25:37, 29:38, 29:40, 46:24ஆவது மற்றும் ஸமூது சமுதாயம்.  (லூத் சமுதாயம்: 54:34)

மேலும் மழையைப் பற்றியான முழு அறிவு (ஞானம்) அல்லாஹ் மட்டுமே அறிந்தவன் என் பதையும் இறைநூல் கூறுகிறது. அதாவது அல்லாஹ் மட்டுமே அறிந்த ஐந்து வி­யங்களில் மழையும் ஒன்று.   பார்க்க  வசனம் : 31:34

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மழை பெய்வதை காணும்போது பயனுள்ள மழையாக ஆக்குவாயாக என்று இறைவனிடம் பிரார்த்திப் பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), புகாரி : 1032

தேவைக்கு அதிகமாக மழை பெய்யும் போது இறைதூதர்(ஸல்) என் இறைவனே மேடு களிலும், பள்ளங்களிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும் மரங்கள் முளைக்கும் இடங்களில் இந்த மழையை பொழியச் செய்வாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள்.  (புகாரி: 1019)

ஆக மழையானது வரமாகவோ, சாபமாகவோ மாறுவது மனிதர்கள் பிரார்த்தனை செய்வதிலும் அதை இறைவன் ஏற்பதிலும் தான் இருக்கிறது. மழை வரமாக நாம் பிரார்த்தனை செய்யவேண்டும்.      (இன்ஷா அல்லாஹ்)

Previous post:

Next post: