வாழ்க்கைப் பரீட்சையில்…தேறுபவர்கள் யார்?

in 2024 நவம்பர்

வாழ்க்கைப் பரீட்சையில்தேறுபவர்கள் யார்?

அபூ அப்தில்லாஹ்

மறுபதிப்பு :

உங்களில் அழகிய செயல்கள் செய்பவர்கள் யார் என்பதை பரீட்சித்து அறிவதற்காக மரணத்தையும், வாழ்வையும் (அல்லாஹ்) படைத்தான் (ஆட்சி: 67:2) (மேலும் பார்க்க : 5:48, 6:165, 11:7, 16:92, 5:94, 27:40, 8:57)

இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள், மனிதப் பிறப்பிலிருந்து இறப்பு வரை அல்லாஹ் கொடுத்துள்ள இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கை என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ள முடியும்.

பரீட்சை என்றால் தனித்தனியாக ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் ஆற்றலையும் திறமையையும் அறிந்து கொள்வதற்காக வைக்கப்படும் சோதனை என்பதை அறிய முடியாத அறிவிலி ஒருவரும் இருக்க முடியாது. பரீட்சையில் வெற்றி பெற ஒவ்வொருவரும் சுயமாகப் படித்து அறிந்து மனதில் நிறுத்திக்கொண்டு அதையே வெளிப்படுத்த வேண்டும், எழுத வேண்டும் என்பதையும் அறியாத அறிவிலியாரும் இருக்க முடியாது. பரீட்சையில் பக்கத்திலிருப்பவன் எழுதுவதை அப்படியே பார்த்து எழுதுவது பரீட்சையை எழுதியதாகாது; அவன் தண்டிக்கப்படுவான் என்பதையும் அறியாத அறிவிலியாரும் இருக்க முடியாது.

பரீட்சைக்கு முன்னர் திறமையான மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பரீட்சையில் சுயமாகவே எழுத வேண்டும் என்பதை அறியாத அறிவிலி யாரும்  இருக்க முடியாது.

இப்படி உலகியல் பரீட்சைகளில் ஒவ்வொரு தனி நபரும் சுயமாக விளங்கி பரீட்சை எழுத வேண்டும் எனத் தெளிவாக, சரியாக விளங்கி வைத்திருக்கும் பெருங் கொண்ட மக்கள் வாழ்க்கைப் பரீட்சையில், மவ்லவிகளான மதகுருமார்களைக் கண் மூடி நம்பி அவர்கள் சொல்லும் சுய, மேல் விளக்கங்களை அப்படியே செயல்படுத்துகிறார்களே! காப்பி அடிக்கிறார்களே! இவர்கள் வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியடைவார்களா? தோல்வியைத் தழுவுவார்களா? இவர்கள் வாழ்க்கைப் பரீட்சையில் தேறமுடியுமா? நிதானமாக நடுநிலையுடன் சிந்தித்து உண்மையைக் கண்டறிய முன் வாருங்கள்.

உலகியல் பரீட்சையில் காப்பி அடிக்கக் கூடாது என அரசுகள் சட்டம் இயற்றி வைத்திருப்பது போல், அரசுகளுக்கெல்லாம் பேரரசுக்கு அதிபதியான அல்லாஹ் தனது இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆனில் வாழ்க்கைப் பரீட்சையில் எந்த மவ்லவியையும், ஆலிமையும், மதகுருவையும் நம்பிச் செயல்படக் கூடாது என்று தெளிவாகத் திட்டமாக 7:3, 33:36,66,67,68, 18:102-106, 59:7 போன்ற இறை வாக்குகளில் கூறியிருக்க, இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்துப் புறக்கணித்து விட்டு, இம்மத குருமார்களைப் பாதுகாவலர்களாக, வழிகாட்டிகளாக நம்பிப் பின்பற்றுவது வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியைத் தருமா? நிதானமாக நடுநிலையுடன் சுயமாகச்  சிந்தியுங்கள்.

கூலி, சம்பளம், அன்பளிப்பு என மக்களிடம் வாழ்வாதாரத்தை நோக்கமாகக் கொண்டு மார்க்கப் பணி புரிகிறவர்கள் நேர்வழியில் இல்லை; மக்களிடம் சம்பளம் வாங்காமல் மார்க்கப் பணி செய்கிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்கிறார்கள் என யாசீன் 36:21 இறைவாக்கு நேரடியாகக் கூறிக் கொண்டிருக்க, அதற்கு மாறாக கூலிக்கு வேலை செய்யும் இந்த மதகுரு மார்கள் நேர்வழியையே போதிக்கிறார்கள் என்று நம்புபவர்களை விட அறிவீனர்கள் இருக்க  முடியுமா?

சம்பளத்திற்காக மார்க்கப்பணி புரியும் இம்மதகுருமார்கள், கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள். மக்களை வழிகேட்டில் இட்டுச் சென்று நரகை நிரப்புவார்கள்; வரம்பு மீறி நடக்கும் தாஃகூத்கள், மனித ஷைத்தான்கள் என 2:41,75,78,79,109,146,174, 3:78,187,188, 4:44,46, 5:41,63, 6:20,21, 25,26, 9:9,10,34, 11:18,19, 31:6, 2:256,257, 4:51,60,76 5:60, 16:36, 39:17, 2:14, 6:71,112, 7:30, 19:68,83 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் கூறிக்கொண்டிருக்கின்றன. நேரடியாகப் படித்துப்  படிப்பினை  பெறுங்கள்!

மவ்லவிகள், ஆலிம்கள், அரபி கற்ற மேதைகள் என 4:49, 53:32 இறைவாக்கு களை நிராகரித்து முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு அகந்தை ஆணவம் பேசும் இந்த மதகுருமார்கள் இந்த அளவு இழிவு பட, வானத்தின் கீழுள்ள படைப்புகளி லேயே மிகமிக கேடுகெட்டப் படைப்பாக அல்குர்ஆன் கூறக் காரணம். அவர்கள் 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164, 180, 34:47, 38:86, 42:23 ஆகிய இறைவாக்குகள் நேரடியாகத் தெளிவாக மார்க்கப் பணிக்குக் கூலியைசம்பளத்தை மக்களிடம் ஒருபோதும் கேட்கக் கூடாது; சுயமாக உழைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, மார்க்கப் பணியை நாளை மறுமையில் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து அல்லாஹ்வுக் காகச் செய்ய வேண்டும் என்றுத் திட்டமாகக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இம் மதகுருமார்கள் மார்க்கப் பணிக்கு மக்களிடம் கையேந்தும் இழி தொழிலைச் செய்வ தன் காரணமாகவே அவர்கள் வானத்தின் கீழ் வாழும் படைப்புகளிலேயே மிக மிக கெடுகெட்ட ஜென்மமாக இறைவனால் அடையாளம்  காட்டப்படுகிறார்கள்.

இப்போது இந்த மவ்லவிகளைஆலிம்களை 7:3, 18:102-106, 33:36,66,67,68 இறை வாக்குகளை நிராகரித்துப் புறக்கணித்து விட்டு, தங்களின் பாதுகாவலர்களாகவழிகாட்டிகளாக, ஆபத்பாந்தவன்களாக நம்பி அவர்களின் கூற்றுக்களை அப்படியே வேத வாக்குகளாக எடுத்து நடக்கும் முஸ்லிம்கள் 47:24ல் அல்லாஹ் சொல்வது போல் தங்கள் உள்ளத்திற்குப் பூட்டுப் போடாமல் தங்கள் புத்திக்கு வேலை கொடுத்துச் சிந்தித்துப் பார்க்க அன்புடன் வேண்டுகிறோம்.

பொதுமக்களாகிய நீங்கள் உங்களின் சொந்த உழைப்பால் பொருள் ஈட்டி நீங்கள், உங்கள் குடும்பம், உற்றார், உறவினர் போன்றோருக்குத் தாராளமாக செலவிடுவதுடன் மானங் கெட்டுப் போய் உங்களி டம் கையேந்தி நிற்கும் 68:13 குறிப்பிடும் ஒரு மதகுருவின் இழிகுணம் கொண்ட இந்த மவ்லவி, ஆலிம், அரபி கற்ற மேதை என பெருமை, ஆணவம் பேசும் மதகுரு மார்களுக்கும் தாராளமாகக் கொடுத்து அவர்கள் குடும்பம் நடத்த உதவுகிறீர்கள்.

இப்போது சிந்தியுங்கள்! கேவலம் தன்னையும் தன்குடும்பத்தையும் ஹலாலான ஒரு தொழில் மூலம் பொருள் ஈட்டி காப்பாற்ற வக்கற்ற, கையாலாகாத இந்த மவ்லவிகள் உங்களை நேரான வழியில் இட்டுச்  சென்று சுவர்க்கத்தில் நுழைய வைப்பார்கள் என நம்புகிறீர்களே, இதைவிட ஒரு மூடத்தனமான நம்பிக்கை வேறு இருக்க முடியுமா?

கூரையேறி கோழி பிடிக்க வக்கற்றவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?’ என்று சுய சுயசிந்தனையுடன் கூறும் ஹிந்துக்களை விடவா, இம்மவ்லவிகள் பின்னால் செல்லும் முஸ்லிம்கள் சுய சிந்தனை அற்றவர்கள்? எவ்வளவு பெரிய கைசேதம்? எவ்வளவு பெரிய நட்டம்? மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இந்த மவ்லவிகள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட முஸ்லிம்கள் 7:3, 18:102-106, 33:36,66,67,68 நேரடி இறைக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணித்து முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டுச் செயல்படுவதால், 18:102-106, இறைவாக்குகள் கூறுவது போல் தங்களின் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், சதக்கா மற்றும் அனைத்துவித நன்மையான செயல்களும் நிறுக்கப்படாமலேயே நரகத்தில் தூக்கி எறியப்பட்டு, அவர்களின் முகங்கள் நெருப்பில் சுட்டெரிக்கப்படும் வேதனை தாங்க இயலாமல் கதறுவதோடு இம்மவ்லவிகளை கடுமையாக சபிப்பதையும், அவர்களுக்கு இரு மடங்கு வேதனை கொடுக்கும்படி இறைவனிடம் இறைஞ்சுவதையும், 33:66,67,68 இறைவாக்குகள் நெத்தியடியாகக் கூறுவது இவர்களுக்கு  விளங்கவில்லையா?

இங்கும் இந்த மூட முல்லாக்கள் 33:36, 66,67,68 இறைவாக்குகள் முஸ்லிம்களைக் குறிப்பிடவில்லை; முஸ்லிம் அல்லாத காஃபிர்கள் பற்றிக் கூறுவதாகும் என்று இவர்களின் ஆசிரியர்களான புரோகித முன்னோர்களே எழுதி வைத்திருப்பதை அப்படியே வாந்தி எடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சிப்பார்கள்; என்னே மடமை?

காஃபிர்களில் யாராவது அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே? அவனது தூதருக்கு வழிப்பட்டிருக்க வேண்டுமே எனக் கூற முடியுமா? அல்குர்ஆன் முழுக்கத் தேடிப் பாருங்கள். காஃபிர்கள் அவர்கள் பின்பற்றிய முன்னோர்களை மூதாதையர்களை சாதத்தனா, குபராத்கானா அதாவது சாதாத்துகளையும், அகாபிரீன்களையும் என்று குறிப்பிட்டுக் கூறுவதாகக் காணப்படுகிறதா?  இல்லையே! 

காஃபிர்கள் அவர்கள் பின்பற்றியவர் களை முன்னோர்கள், மூதாதையர்கள் (ஆபாஅனா) என்று கூறியதாகவே காணப்படுகிறது. (2:170, 31:21) அல்லாஹ்வைப் பற்றியோ, அவனது தூதரைப் பற்றியோ காஃபிர்கள் சொன்ன ஒரே ஒரு ஆதாரத்தையும் குர்ஆனில் காட்டமுடியாது. மேலும் காஃபிர்கள் அவர்கள் பின்பற்றியவர்களை ஆசிரியர்களானமுன்னோர்கள் என்று குறிப்பிடுகின்றனரே அல்லாமல், ஸாதாத்துகள், அகாபிரீர்கள் என்று கூறிய ஆதாரமும் குர்ஆனில்  இல்லவே  இல்லை.

33:66,67,68 இறைவாக்குகள் திட்டமாகத் தெளிவாக, நேரடியாக முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு குர்ஆன் கூறும் நேரடிக் கருத்துக்களைப் புறக்கணித்து, நிராகரித்து விட்டு மவ்லவிகள், ஆலிம்கள், நாதாக்கள், அவுலியாக்கள், இமாம்கள், ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் என்று கூறிக் கொண்டு ஸாதாத்துகளையும், அகாபிரீன்களையும், பின்பற்றி நரகைச் சென்றடைவ தையே குறிப்பிடுகின்றன.

மவ்லவிகள், ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள் என 4:49, 53:32 குர்ஆன் வசனங்களை நிராகரித்து அபூஜஹீல் வாதம் வைக்கும் இந்த மதகுருமார்களிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தாங்கள் தான் நேர்வழியில் இருப்பதாகவும், தங்களைப் பின்பற்றுகிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பதாகவும் சுவர்க்கம் செல்வோர் என்றும் மற்றப் பிரிவினர் அனைவரும் வழிகேட்டில் இருப்பதாகவும், நரகை அடைவர் என்றும் பிதற்றுவர், மதகுருமார்களில் எவருமே அல்லாஹ் அல்குர்ஆனில் முஹ்க்கமாத் வசனங்களில் நேரடியாகக் கூறி இருப்பதற்கு எவ்வித சுய, மேல் விளக்கம் கொடுக்காமல் எடுத்து நடப்பதே நேர்வழியாகும் என்று ஒருபோதும்  கூறமாட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் 33:21,36 குர்ஆன் வசனங்களின்படி நடந்து காட்டிய சுன்னத்தான நடைமுறைகள் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ள ஆதாரபூர்வமான ஹதீத்களுக்கு எவ்வித சுய மேல் விளக்கம் கொடுக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்து நடப்பதே நேர் வழியாகும் என்று ஒரு போதும் கூறமாட்டார்கள். அப்படிக் கூறினால் அவர்கள் மார்க்கத்தை ஒருபோதும் பிழைப்பாகக் கொள்ள முடியாது. அவர்களின் புரோகித வருமானத்தில்  மண்  விழுந்து  விடும்.

ஆனால் அல்லாஹ்வோ மார்க்கப் பணி யைப் பிழைப்பாக ஒருபோதும் பிழைப்பா கக் கொள்ளக் கூடாது என மேலே சுட்டிக் காட்டியுள்ள எண்ணற்ற இறைவாக்குகளில் நெத்தியடியாகக் கூறி இருக்கிறான். இந்த குர்ஆன் வசனங்களைப் பொருட்படுத்தாமல் மார்க்கப் பணியைச் சும்பளத்திற்குச் செய்கிறவர்கள் தாஃகூத்கள் என்ற மனித ஷைத்தான்கள் என அல்லாஹ் அடையாளம்  காட்டுகிறான்.

ஆகவே மதகுருமார்களான இம்மவ்லவிகளின் சுய, மேல் விளக்கத்தை வேதவாக்காக கொண்டு கண்மூடி அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் 9:31 வசனம் கூறுவது போல் அவர்களை வணங்குவதை விட்டு விலகி, அம்மதகுருமார்களிலிருந்து முற்றிலும் விலகி அல்லாஹ்வையே முற்றிலும் நம்பி, அவனையே முன்னோக்கி இருப்பவர்களே, அவனது நல்வாழ்த்தைப் பெறுகிறவர்கள்; அப்படிப்பட்டவர்களுக்கு எனது நல்வாழ்த்தைக் கூறுவீராக என்று அல்லாஹ் 39:17 வசனத்தில் நபிக்குக் கட்டளையிடுகிறான்.

மேலும் அவர்கள் எப்படிப்பட்ட நடைமுறைகளை உடையவர்கள் என்றால், அவர்கள் குறிப்பிட்ட ஒரு மவ்லவியை நம்பி அவரது பேச்சை மட்டும் கேட்பவர்களாகவும், அவரது எழுத்தை மட்டும் பார்ப்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள், எழுத்தைப் பார்க்காதீர்கள், அவர்களின் கூட்டங்களுக்குச் செல்லாதீர்கள் என்று தடுக்கும் தாஃகூத்களின் துர்போதனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அப்படிப்பட் டவர்களின் ஷைத்தானிய வழிகேட்டு போதனையை ஒருபோதும் கேட்கமாட்டார்கள். நிராகரித்து விடுவார்கள்.

39:18 குர்ஆன் கட்டளைப்படி யார் பேசினாலும் காது கொடுத்துக் கேட்பார்கள். எவரது எழுத்தையும் கவனமாகப் படித்துச் சிந்திப்பார்கள். அவற்றில் குர்ஆன், ஹதீ துக்கு உட்பட்டதை அதாவது அழகானதை எடுத்து நடப்பார்கள். மனித சுய, மேல் விளக்கங்களை அதாவது கெட்டவற்றைத் தூக்கி எறிந்து விடுவார்கள். இத்தரத்தினரையே அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். இவர்கள்தான் நல்லறிவுடையோர் என்றும்  அல்லாஹ்  வாழ்த்துகிறான்.

அல்லாஹ்வின் இந்த 39:17,18 வசனங்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டுக் குறிப்பிட்ட ஒரு மவ்லவியை, ஆலிமை அவர் மெத்தப் படித்தவர் குர்ஆன், ஹதீதை கரைத்துக் குடித்தவர் மவ்லவிஆலிம் எனக் குருட்டுத்தனமாக நம்பி அவர் கூறுப வற்றை வேதவாக்காக கொண்டு செயல் படுகிறவர்கள் நாளை மறுமையில் தங்கள் இருப்பிடத்தை நரகத்தில் பதிவு செய்து கொள்கிறார்கள். நாளை நரகில் கிடந்து வெந்து கருகிக் கொண்டு அவர்கள் பின் பற்றிய மவ்லவியைஆலிமை கடுமையாகச் சபிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டப் போகிறார்கள். நாம் இதைக் கூறவில்லை. அல்குர்ஆன் 33:66,67, 68 இறைவாக்குகள் கூறிக் கொண்டிருப்பதை நேரடியாகப் படித்து சிந்திப்பவர்கள் நிச்சயமாக  அறியமுடியும்.

மனிதர்களில் யாரிடமும் எந்த விளக்கமும் கேட்காமல் ஒவ்வொருவரும் நேரடியாகக் குர்ஆன், ஹதீதைப் பார்த்து அதன்படி மட்டுமே நடக்கவேண்டும் என்கிறார் அபூ அப்தில்லாஹ் இது எப்படி சாத்தியம்? சாத்தியமில்லாத ஒன்றைச் சொல்லி மக்களை வழிகெடுக்கிறார் என்று இந்த மவ்லவிகள் கூறி மக்களைத் திசை திருப்புகிறார்கள். அப்படியா நாம் கூறுகிறோம். இல்லையே! 16:43, 21:7, 39:17,18 இறைக் கட்ட ளைகளை நிராகரித்துப் புறக்கணித்துவிட்டு அவ்வாறு நாம் கூறினால் நாமும் வழிதவறிச் செல்லும் பிரிவுகளில் ஆகிவிடுவோம். நிச்சயமாக நமக்கு அத்துணிவு கிடையாது.

மவ்லவிகளான இம்மதகுருமார்கள்தான் 16:43, 21:7 வசனங்களில் வரும்அஹ்லக் ஃதிக்ரிஎன்ற அரபி பதத்திற்கு அறிவுடைய வர்கள்ஆலிம்களாகிய எங்களிடம் கேட்டு, நாங்கள் கூறும் சுய, மேல் விளக்கப்படி நடக்கவேண்டும் என்று கூறி மக்களை எண்ணற்ற பிரிவுகளாக்கி வழிகெடுக்கி றார்கள்.

ஆலிம்அறிஞர்கள் சொல்வதை ஏற்க வேண்டும் என்றால்அஹ்லல் இல்மிஎன்றிருக்க வேண்டும். மவ்லவிகளைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் என்றால்கல்லிதூ அஹ்லல் இல்மிஎன்று இருக்க வேண்டும். 16:43, 21:7 இரண்டு இடங்களிலும் அப்படி இல்லைஃபஸ்அலூ அஹ்லஃத்திக்ரீஎன்றே இருக்கிறது. அதாவது குர்ஆனில் குறிப்பிட்ட பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாவிட்டால், அப்பொருள் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில், எந்த வசனத் தில் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருப்பவர்களிடம் கேட்டு அறிந்து, அதைப் பார்த்து விளங்கி அதன்படி நடக்க வேண்டும் என்றே இவ்விரு வசனங்களும் கூறுகின் றன.

அனைத்துப் பிரிவு மவ்லவிகளும்ஃபஸ் அலூ அஹ்லஃத்திக்ரீஎன்பதற்குத் தவறான பொருள் கொடுத்து, குர்ஆன் வசனங்களுக்கு முரணான சுய, மேல் விளக்கங்களைக் கொடுத்து அவற்றையே தங்கள் தங்கள் பக்தர்கள் கண்மூடிப் பின்பற்றவேண்டும் என்றே போதிக்கிறார்கள். மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்காதீர்கள்; காதைப் பொத்திக் கொள்ளுங்கள்; மற்றவர்களின் எழுத்துக்களைப் பார்க்காதீர்கள்; கண்ணை மூடிக் கொள்ளுங்கள்; குறிப்பாக அந்நஜாத்தைப் பார்க்கவே பார்க்காதீர்கள் என்றே தங்கள் பக்தர்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.

ஆனால் இம்மவ்லவிகளின் இப்போதனைக்கு மாறாக 39:17,18 குர்ஆன் வசனங்கள், இப்படித் தவறான போதனைகள் செய்வோர் தாஃகூத்கள் எனும் மனித ஷைத்தான்கள்; நேர்வழி நடந்து வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியடைந்து சுவர்க்கம் நுழைய விரும்புவோர் தாஃகூத்களான இம்மவ்லவிகளை 9:31 சொல்வது போல் ரப்பாக ஆக்கி அவர்களை வணங்குவதை விட்டும் விடுபட்டு, அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து, யார் உபதேசம் செய்தாலும் அதைக் காது கொடுத்துக் கேட்டு, யாரு டைய எழுத்தாக இருந்தாலும் அதைக் கவனமாக, சுய சிந்தனையுடன் படித்து அவற்றில் குர்ஆன், ஹதீதுக்கு முரணில்லாமல் இருப்பதை அதாவது அழகானவற்றை மட்டுமே எடுத்து நடக்க வேண்டும். மவ்லவியோ, மவ்லவி அல்லாத அவாமோ  (மவ்லவிகளின் மவ்லவி அல்லாத அவாமோ (மவ்லவிகளின் கருத்துப்படி) யார் சொன்னாலும் அவற்றில் அழகானதை மட்டுமே எடுத்து  நடப்பவர்கள் மட்டுமே நேர்வழி நடப்ப வர்கள், இறைவனின் நல்வாழ்த்தைப் பெறுகிறவர்கள், அறிவுடையவர்கள் இவர்கள் மட்டுமே. மவ்லவிகளை பாதுகாவலர்க ளாகவழிகாட்டிகளாகக் கொண்டு அவர்கள் பின்னால் செல்பவர்கள் முகல்லிதுகள், ஜாஹில்கள், அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி நரகம் புகுகிறவர்கள். இக்கருத்து 39:17,18, 2:39,159,161,162 வசனங்களில் இருக்கின்ற னவா என நேரடியாகப் படித்துப் பார்த்துச் செயல்பட அன்புடன் வேண்டுகிறோம். குர்ஆன், ஹதீத் ஆதாரங்களை நேரடியாகப் பார்க்காமல், அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள அறிஞர்களின் கருத்துக்களை வேதவாக்காகக் கொண்டு அதன்படி நடப்பவர்கள் 7:3, 33:21,36, 18:102-106, 59:7 போன்ற குர்ஆன் வசனங்களை நிராகரிக்கிறார்கள். 2:39, 33:66,67,68 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் நிரந்தர நரகை அடைந்து அதில் என்றென்றும்  தங்கி  விடுவார்கள்.

தெற்கே கன்னியாகுமரி தொடர் வண்டியில் அமர்ந்து கொண்டு, இறைவா என்னை பாதுகாப்பாக வடக்கே சென்னை கொண்டு சேர்த்து விடு எனத் தொடர்ந்து தொழுது, திர்க் செய்து அப்பிரயாணம் முழுக்க அழுதழுது துஆ செய்தாலும் அவரது வணக்க வழிபாடு மகிமையாலும், துஆவின் மகிமையாலும் அவ்வண்டி ஒருபோதும் சென்னை செல்லாது; கன்னியாகுமரி  தான்  செல்லும்.

அதேபோல் மவ்லவிகளான இந்த மதகுருமார்களை நம்பி, குர்ஆன், ஹதீத் நேரடி ஆதாரம் பார்க்காமல், அவர்களின் சுய, மேல் விளக்கங்களை வேதவாக்காகக் கொண்டு அவற்றின்டி செயல்படுகிறவர்கள். 7:3, 33:36,66,67,68, 18:102-106 இறைவாக்குகள்படி நரகிற்கு இட்டுச் செல்லும் வண்டியில் அமர்ந்து கொண்டு ஐங்காலமும் தவறாது தொழுது, வருடா வருடம் ரமழான் நோன்பு நோற்று, ஹஜ் செய்து, ஜகாத், சதகா கொடுத்து, அதிகமதிகம் திக்ர் செய்து அழுதழுது இறைவா என்னை சுவர்க்கத்தில் கொண்டு சேர் என விடாது துஆ செய்தாலும், மவ்லவிகளின் அந்த வண்டி ஒருபோதும் சுவர்க்கம் செல்லாது; நரகையே சென்றடையும். அங்கிருந்து ஒருபோதும் சுவர்க்கம் செல்ல முடியாது என்பதை மேலே கண்டுள்ள அனைத்து குர்ஆன் வசனங்களையும் மீண்டும், மீண்டும் சுய சிந்தனையுடன் படித்து விளங்கி உறுதி செய்து கொள்ள வேண்டுகிறோம். முயற்சிப்பவர்களே வெற்றி பெறுவார்கள். (29:69)

Previous post:

Next post: