அவர் யார்?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
நான் குழந்தையாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு ஒருவரை(?) புதியதாக அழைத்து வந்தார் என் அப்பா, அவரை(?) என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது, இருவரும் (அம்மா–அப்பா) என்னிடம் செலவழிக்கும் நேரத்தை விட அவரிடம்(?) அதிக நேரம் செலவழித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை(?) பிடிக்கவில்லை, ஆனாலும் வெகு சீக்கிரமே அவர்(?) எங்கள் குடும்பத்தில் ஒருவராக போனார். நாட்கள் செல்ல செல்ல எனக்கும் அவரை(?) பிடித்துவிட்டது.
என் அப்பாவும், அம்மாவும் எதாவது அறிவுரை சொல்லிக் கொண்டே என்னை எரிச்சல் படுத்துவார்கள். ஆனால் அவரோ(?) அறிவுரை எதுவும் கூறுவது இல்லை. அவர்(?) கூறுவது சுவாரஸ்யமாக இருந்தது எனக்கு, நானும் அவர்(?) பேசுவதை ரசிக்க ஆரம்பித்தேன். அவர்(?) மாலை/இரவு நேரங்களில் சில அற்புதமான கதைகளைச் சொல்லி தன்னுடைய பேச்சு திறமையால் மணிக்கணக்கில் கட்டிப்போட்டு விடுவார்.
காதல் கதைகளை, குடும்ப கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். சில நேரங்களில் நகைச் சுவையாகவும் பேசுவார். அதுமட்டுமல்ல அறிவியல், அரசியல், வரலாறு இன்னும் ஏராளமான விசயங்களை கூறுவார்.
அவர்(?) சிந்திக்கவும் வைப்பார், சில நேரம் எங்கள் அம்மாவிற்கு அழுகை வரும் அளவிற்கு குடும்ப கதைகளை கூறுவார், எங்களை அச்சுறுத்துவார், ஆசைகளை தூண்டுவார், ஆனந்தத்தில் மிதக்கவும் வைப்பார், படு அவஸ்தையிலும் மூழ்கடிப்பார்.
நாட்கள் விரைந்தது, நாளுக்கு நாள் அவரது(?) பேச்சு பல கோணங்களில் அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் முன்பு போல் அவரைப்(?) பிடிப்பதில்லை, அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட விரும்பினாலும் அது முடியவில்லை, அப்பா அவரைப்(?) பற்றி அவ்வளவாக அலட்சிக் கொள்ளவில்லை.
அவர்(?) வந்ததிலிருந்து எங்கள் வீட்டுக்கு முன்பு போல் அதிகமாக உறவினர்கள் வருவதில்லை. காரணம் அவரிடம்(?) மட்டுமே பேசுவதை அவர்(?) விரும்பினார். (இவரை போன்று இன்று எல்லோர் வீட்டிலும் ஒருவர் இருக்கிறார்)
அவரால்(?) எல்லோர் வீட்டிலும் கணவன் – மனைவி பிரச்சனை, சமையலில் கவனக் குறைவு, வீட்டு வேலைகளை தள்ளிபோடுவது, குழந்தைகளை கவனிப்பதில்லை, முதியோர்களை கவனிக்காமல அலட்சியப்படுத்துவது இன்னும் ஏராளம் ஏராளம் இவைகளுக்கு அவர்(?) தான் காரணம்.
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் மதுவைப் பற்றியோ, சிகரெட் பிடிப்பது பற்றியோ அல்லது உடலுக்கு கெடுதல் தரும் செயற்கையான குளிர்பானங்களை பற்றியோ விருப்பம் இல்லை. ஆனாலும் அதைப்பற்றி மறைமுகமாகவும், நேரிடையாகவும் பேசுவார். மேலும் செக்ஸ் பற்றி கூட கூச்சமில்லாமலும், அது தவறில்ல என்பது போலவும் எல்லோர் முன்னிலையிலும் சில நேரம் அவர்(?) பேசுவார். இவரால் எங்கள் உறவு முறையில் மாற்றம் ஏற்பட்டது, ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது கூட குறைந்துபோனது. இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப்(?) பார்க்கலாம். அவர் எப்பொழுதும் வரவேற்பு அறையில்தான் உட்கார்ந்து கொண்டு உங்களுடன் கூட பேச காத்துக் கொண்டிருக்கிறார்.
யார் அவர்? அவர் யார்?
அவர்(?) பெயர் என்ன?
அவருக்கும் எங்களுக்கும் என்ன உறவு முறை? என்றுதானே கேட்கிறீர்கள்.
அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படி கேட்கமாட்டீர்கள்.
அவர் (?) யார் என்று சொல்கிறேன் கேளுங்கள்.
அவரை(?) நாங்களும், இந்த உலகமும் டி.வி. என்று அழைப்போம். சில வளர்ந்த நாடு களில் அவரை(?) என்று கூறுவார்கள். அவருக்கு பிறகு அவருடைய மனைவியான கம்ப்யூட்டரும் எங்களுடன் ஒட்டிக்கொண்டது. அவர்களுடைய குழந்தையான அவனும் எங்களோடு விடாப்பிடியாக, இப்போ ஒட்டிக்கொண்டான். அவனுக்கு பெயர் மொபைல் போன்.
இவர்களை எப்படி வெளியே அனுப்புவது?
இவர்களை வெளியே அனுப்ப முடியாமல் செய்வது யார்?
வேறு யார் மனிதர்களுக்கு எதிரியான இப்லீஸ்தான்.
“நான் (இப்லீஸ்) வழிகெட்டு விட்டதால், ஆதம் சந்ததிகளை (மனிதர்களை) உனது நேரான வழியில் வரவிடாமல் அவர்களை தடுப்பேன். பின்னர் அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் வலப்புறங்களிலும், இடப் புறங்களிலும் அவர்களை வழிகெடுப்பதற்காக வருவேன். அவர்களில் பெரும்பாலானவர்களை உனக்கு நன்றி செலுத்தாதவர்களாக ஆக்குவேன் என்று (இப்லீஸ்) கூறினான்” (அல்குர்ஆன் 7:16,17)
டி.வி. மொபைல் போன்றவற்றிடமிருந்து வெளியேற்ற விடாமல் செய்யும் ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பு தேடுவோம்.
“ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன், அறிந்தவன். (அ.கு. 7:200)
குறிப்பு : டி.வி. கம்ப்யூட்டர், மொபைல் போன் இவைகளை எல்லாம் பயன்படுத்துவது தவறு என்று கூறும் அளவிற்கு நான் முற்போக்கு சிந்தனை அற்றவன் அல்ல, எது வொன்றையும் பயன்படுத்துவதை பொறுத்தே சரி, சவறு என்று அமையும்.
குறைந்தபட்சம் (ரமழான் மாதம் முழுவதுமாவது) TV பார்ப்பதை நிறுத்திக்கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய முயற்சி செய்வோம்.