சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு….
ஜகாத் ஒரே ஒரு முறையா? ஒவ்வொரு ஆண்டுமா?
அபூ அப்தில்லாஹ்
அல்குர்ஆன் வழிகாட்டுகிறது :
நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிமார்களிலும், சந்நியாசி களிலும் அநேகர், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும், எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 9:34)
(நபியே!) அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் நரக நெருப்பில் அவை காய்ச்சப்பட்டு, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும்; (இன்னும்) இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது; ஆகவே, நீங்கள் சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பாருங்கள்(என்று கூறப்படும்). (அ.கு. 9:35)
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுத்துக்கொண்டு, அதைக் கொண்டு அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவீராக! இன்னும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (9:103)
(வெற்றி கொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும்; (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதை களுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் வழிப்போக்கருக்கும் உரியதாகும். உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு) பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (அ.கு.59:7)
மேலும் பார்க்க : 2:43,83,110,177,195,261,262, 277, 3:180, 4:77,162, 5:12,55, 8:60, 9:5,11, 18,60,71, 18:81, 19:13,31,55,59, 21:73, 22:41,78, 23:4, 24:3,7, 24:56, 27:3, 30:39, 31:4, 33:33, 41:7, 49:15, 51:19, 58:13, 61:11, 70:242, 73:20, 92:17,18, 98:5.
அல்ஹதீஃத் வழிகாட்டுகிறது :
யாருக்கேனும், அல்லாஹ் பொருளாதார வசதியை வழங்கி அதற்கு அவன் ஜகாத் கொடுக்காமல் இருந்தால், கியாமத் நாளில் கடுமையான விசம் நிறைந்த பாம்பு ஒன்றை அவன் கழுத்தில் சுற்றச் செய்யப்படும். “நான்தான் நீ சேர்த்து வைத்த செல்வம், நான்தான் நீ புதைத்து வைத்தப் புதையல்” என்று கூறிக்கொண்டே அது அவனைத் தீண்டிக் கொண்டிருக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), புகாரி : 1403
ஏழைகளுக்குச் சொந்தமான ஜகாத் பொருள், மற்ற பொருள்களுடன் கலந்திருந்தால் அவற்றை ஜகாத் பொருள் அழிந்துவிடும் என நபி(ஸல்)கூறினார்கள். ஆயிஷா(ரழி), புகாரீ இமாமின் வரலாற்று நூல்.
வியாபாரத்திற்காக வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதற்குக் கட்டாயம் ஜகாத் வழங்கி வரவேண்டும். அது எந்தப் பொருளாக இருப்பினும் ஜகாத் கட்டாயம் வழங்கியே ஆகவேண்டும். நாங்கள் வியாபாரத்திற்காக வைத்திருக்கும் பொருட்களுக்காக ஜகாத் கொடுத்துவர வேண்டும் என்று நபி(ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சமூரா இப்னு ஜுன்துப்(ரழி), அபூதாவூது:1562, பைஹகீ ஃஅல்குப்ரா: 4/40
இன்று நிலங்கள், கட்டிடங்கள் வருமானத்தைப் பெருக்கும் வியாபாரப் பொருள்களாக இருப்பதால் அவற்றிற்கும் ஜகாத் கணக்கிட்டுக் கொடுக்கவேண்டும். நீர் பாய்ச்சி விளைந்த விளைச்சலில் 5% இயற்கையாக விளையும் விளைச்சலில் 10% உடனடியாக ஜகாத்தாகக் கொடுக்கவேண்டும். இப்னு உமர் (ரழி), புகாரி: 1483
20 தீனாருக்கு (87 கிராம் தங்கம்) குறைவானவற்றில் ஜகாத் கடமையில்லை. 20 தீனார் ஒரு ஆண்டு இருந்தால் அதற்கு ஜகாத் கொடுக்கவேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அலீ(ரழி) அஹ்மத் 804, அபூதாவூத் :1573
190 திர்ஹம் (687 கிராம் வெள்ளி) வரை ஜகாத் இல்லை. 200 திர்ஹம் இருக்கும்போது அதற்கு 5 திர்ஹம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அலீ(ரழி), அபூதாவூது:1573, நஸாயீ:2479, திர்மிதி:620, இப்னு மாஜா : 1791
அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக எவர் தொழுகைக்கும், ஜகாத்துக்கும் இடையில் பாகுபாடு செய்கின்றாரோ அவரோடு நான் போர் தொடுப்பேன். ஏனெனில் நிச்சயமாக ஜகாத் பொருளின் மீதுள்ள பாத்தியதையாகும். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் ஒரு ஆட்டுக்குட்டியேனும் (இன்னொரு அறிவிப்பில் ஒட்டகத்தைக் கட்டும் ஒரு சிறிய கயிறாக இருப்பினும்) எனக்கு அளிக்க மறுப்பாராயின், நபி(ஸல்) அவர்களிடம் அவர் அதனை அளித்து வந்திருப்பின் நிச்சயமாக அவர்கள் அதனை மறுத்தால் நான் அவர்களோடு போர் தொடுப்பேன் என்று முதல் கலீஃபா அபூபக்கர்(ரழி) கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), புகாரி:7284, முஸ்லீம்:20.
இந்த ஹதீஃதை எவ்வித சுயநல உள்நோக்கமும் இல்லாமல் நடுநிலையுடன் படிப்பவர்கள் ஜகாத் கொடுத்த பொருள்களுக்கே மீண்டும் மீண்டும், வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதை எளிதாக விளங்கமுடியும். அறிந்துகொள்ளுங்கள். எவர் பணம் படைத்த அநாதைகளுக்குச் செயலாளராக இருக்கிறாரோ அவர், அவர்களின் பொருள்களில் வியாபாரம் செய்யவும். அன்றி ஜகாத் அவற்றைக் கரைத்து விடும் வரை ஆண்டு விடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். அம்ரு இப்னு ஷிஐபுதம் தந்தை மூலமாகவும் அவர் தம் பாட்டனார் மூலம் அறிந்தது. திர்மிதி.
நிச்சயமாக, நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்தாள். அவருடன் அவரின் மகளும் வந்திருந்தாள். அவளின் கைகளில் இரு பெரும் பொற்காப்புகள் இருந்தன. அப்பொழுது நபி (ஸல்) அப்பெண்ணிடம், இதற்கு நீர் ஜகாத் கொடுத்து வருகிறீரா? என்று கேட்டனர். இல்லை என்றாள் அப்பெண்; (அதற்கு) அவர்கள், அல்லாஹ் உமக்கு மறுமை நாளில் இதன் காரணமாக தீக்குழம்பிலான இரண்டு காப்புகளை அணிவிக்க உமக்கு விருப்பம் தானே? என்று வினவினர். உடனே அவர் அவ்விரண்டையும் கழற்றி நபி(ஸல்) அவர்களின் முன் போட்டு, இவ்விரண்டும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியவையாகும் என்று கூறினார்.
அம்ருப்னு ஷிஐபு அவர்கள் தம் தந்தை மூலமாகவும் அவர்தம் பாட்டனாரின் மூலமாகவும் அறிந்தது. அபூதாவூத்:1563.
ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்றிருந்தால் அக்காப் புகளின் எண்ணிக்கையில் 40ல் 1 கொடுத்தால் போதும் அல்லவா? தொடர்ந்து வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் விட்டதால் அல்லவா இரண்டு காப்புகளையும் கழற்றி ஒப்படைத்துள்ளார்.
மூன்று காரியங்களைச் செய்பவர்கள் இறை விசுவாசத்தின் ருசியைச் சுவைத்துக் கொள்வார்கள்:
1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனே இல்லை என்ற அடிப்படையில் இறைவனுக்கு மட்டுமே அடிபணிபவர்.
2. தனது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர்.
3. பல் உடைந்த, மட்டமான, நோய்வாய்ப் பட்டவற்றை கொடுக்காமல் இருப்பவர். உமர்(ரழி), அபூதாவூத். 1349
ஜகாத் கொடுத்து வரும்படி நபி(ஸல்) கட்டளையிட்ட ஹதீஃத்களில் துஅத்தீ கொடுக் கிறீரா? என்றும், அதுஃத்தீ தருகிறாயா? என்று தொடர் நிலையில் கேட்டிருக்கிறார்களே அல்லாமல் அஃதய்த்த கொடுத்துவிட்டீரா என்றோ, இறந்தகால நிலையில் கேட்க வில்லை. இதிலிருந்து ஒரு பொருளுக்கு வருடா வருடம் தொடர்ந்து ஜகாத் கொடுப்பது கடமை என்பது உறுதியாகிறது.
“ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை.” அலீ(ரழி), அபூதாவூது :1573
இதுவரை நாம் எடுத்து எழுதியுள்ளவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லும் குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்கள் ஆகும். நவீன கால அறிஞர்கள் தனது வழிகெட்டக் கொள்கையை நிலைநாட்ட 22:78ல் “ஹுவ சம்மாக்கு முல் முஸ்லிமீன்‘ அவனே உங்களுக்கு முஸ்லிமீன் எனப் பெயரிட்டுள்ளான் என்பதை அவன் முஸ்லிம் எனச் சொன்னான்–கூறினான் என்று திரித்துக் கூறுவது போல், 9:34ல் வல்லஃதீன யக்னி சூனஃத் ஃதஹப வல்ஃபிழ்ழத வலாயுன்பிகூனஹாஃபீ ஸபீலில்லாஹ்–எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கிறார்களோ என்றிருப்பதிலுள்ள “சேமித்து வைத்துக் கொண்டு” என்றிருப்பதை “தங்கள் பொருளுக்கு” என்று உண்மையை மறைந்து எழுதி, பொருள் கிடைத்தவுடன் ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று தனது மனோ சாட்சிக்கு விரோதகமாக, மனோ இச்சைக்கு (ஷைத்தானுக்கு) அடிமைப்பட்டு வாதிட்டு வருகிறார்கள். 9:34 இறைவாக்கோ 59:7 இறைவாக்குச் சொல்வது போல் வெளியே செல்ல விடாமல் தடுத்துச் சேமித்து வைக்கும் பொருளுக்கு ஜகாத் கடமை என்கிறது.
செல்வத்திற்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்தால் செல்வம் கரைந்து செல்வந்தர்கள் ஏழையாகி விடுவார்கள் எனச் செல்வந்தர்களைப் பயமுறுத்தி அவர்கள் ஜகாத் கொடுப்பதைத் தடுத்தார்கள்.
ஜகாத் செல்வத்தை மேலும் மேலும் வளரச் செய்யும். வட்டி செல்வத்தை அழித்தொழிக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க: 30:39)
ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என்றால் எல்லா செல்வந்தர்களும் ஜகாத் கொடுக்க முன் வருவார்கள் என்று போலி காரணங்களைக் கூறுகிறார்கள். இப்படி எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து–குஃப்ரிலாகி ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும், அதுவும் பொருள் கைக்குக் கிடைத்தவுடன் ஜகாத் கொடுக்கவேண்டும். ஒரு வருடம் கழிய வேண்டியதில்லை என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் முடிவு செய்த விசயத்தில் வேறு கருத்துக் கூறும் தவ்ஹீத்வாதிகளின் நாளைய நிலையை 33:36 இறைவாக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
30 கோடி ரூபாயைத் தங்கத்தில் முதலீடு செய்து நகைக்கடை வைத்திருக்கும் ஒரு நகைக் கடைக்காரர், 30 கோடி ரூபாய்க்கு வருடா வருடம் 2% சதவீதம் என்று 75 லட்ச ரூபாயை ஜகாத்தைக் கொடுக்க முடியுமா? என்று கேட்டார். அதுபோல் 40 கோடி செல்வம் இருந்தால், கோடி வருடா வருடம் ஜகாத் கொடுக்கவேண்டும். 100 கோடி செல்வம் இருந்தால் 2டிகோடி வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும். இது எப்படிங்க முடியும்?
ஒருசில ஆயிரக்கணக்கில் ஜகாத் கொடுக் கும்போது ஜகாத் வருடா வருடம் கொடுக்க முன் வந்த இந்தச் செல்வந்தர்களுக்கு, கோடிக் கணக்கில் ஜகாத் வருடா வருடம் கொடுக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களின் செல்வத்தில் 30:39 இறைவாக்கில் வாக்களித்திருப்பது போல் பல மடங்கு பெருகிப் பல நூறு கோடியானவுடன், கோடிக்கணக்கில் வருடா வருடம் ஜகாத் கொடுப்பதா என மலைக்கிறார்கள். அவர்களின் மலைப்புக்கு நீர் வார்த்தது அவர்களை மகிழ்விக்க ஒரு பொரு ளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று வழிகெட்ட குருட்டு ஃபத்வாவை வழங்கி வருகிறார்கள்.
100 கோடிசெல்வம் உடைய ஒரு செல்வந்தன் இந்த வருடம் 21/2 கோடி ஜகாத் கொடுக்கிறான் என்றால் அந்த 21/2 கோடிதான் அவனது நிரந்தர வைப்பு நிதி. வருடா வருடம் அவன் தொடர்ந்து ஜகாத் கொடுத்து வந்தால் வருடா வருடம் அவனது நிரந்தர வைப்பு நிதியில் அது சேர்ந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் அவனது அஜல் முடிந்து மரணத்தைத் தழுவுகிறான். அவன் இதுவரை எனது செல்வம், எனது செல்வம் எனப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தானே அது இப்போது அவன் செல்வமில்லை. அவனது வாரிசுகளினதும், பினாமிகளினதும் செல்வமாகி விட்டது. அவன் தனது செல்வம், தனது செல்வம் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தானே அந்தச் செல்வத்தை இழப்பதோடு மட்டுமல்ல, அவனது வாரிசுகளும், பினாமிகளும் அதை அனுபவித்து மகிழ்வது மட்டுமல்ல. நாளை மறுமையில் அவை நரக நெருப்பில் காய்ச்சப்பட்டு அவனது விலாப் புறங்களிலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும். இதுதான் நீ உனக்காகச் சேமித்து வைத்திருந்தது. நீ சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பார் என்று அச்செல்வந்தர்களுக்குக் கூறப்படும். (பார்க்க : 9:34,35)
நபி(ஸல்) அவர்களும் இப்படி எச்சரித்துள்ளார்கள், மனிதன் தனது செல்வம் தனது செல்வம் என பெருமையடிக்கிறான். அவன் உண்டு கழித்தது, உடுத்திக் கிழித்தது, மறுமை வைப்பு நிதியில் சேமித்தது மட்டுமே அவனது செல்வம் எஞ்சியவை அவனது வாரிசுகளுக் குரியதாகும். (ஹதீஃத் சுருக்கம்) செல்வத்தைச் சேமித்து வைத்துக்கொண்டு வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் சேமித்து வைத்திருக்கிறீர்களே அது உங்கள் செல்வம் அல்ல. நீங்கள் வருடா வருடம் ஜகாத், சதக்கா கொடுத்து மறுமை வைப்பு நிதியில் சேர்த்து வைப்பது மட்டுமே உங்கள் செல்வம். அதுவே நாளை மறுமையில் பலனளிக்கும். வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் நீங்கள் சேமித்து வைக்கும் செல்வம் நாளை மறுமையில் நெருப்பிலிட்டுக் காய்ச்சப்பட்டு உங்கள் நெற்றி, விலா, முதுகில் சூடு வைக்கப்படும் எச்சரிக்கை. (பார்க்க : 9:343,35)