தினமும் (பாவ) மன்னிப்புத் தேடுவோம்!
M. சையத் முபாரக், நாகை.
நாம் பாவம் செய்யும்போது ஈமான் குறைகிறது. நம்மிடமிருந்து ஈமான் விடை பெறுகிறது. (புகாரி:5578) ஈமான் நீங்கிய நிலையில் நம்மை மரணம் தழுவி விட்டால் நம்மை அரவணைக்கக் காத்திருப்பது நரகமே. ஆகவே, பாவம் செய்வதைத் தவிர்க்கலாம். நம்மை அறியாமல் ஏற்படும் பாவத்திற் காகவும், அறிந்து செய்யும் பாவத்திற்காகவும் தினமும் தவ்பா (பாவமன்னிப்பு) அல்லாஹ்விடம் கேட்போம்.
அல்லாஹ்வின் விருப்பம் :
பாவம் செய்வது அல்லாஹ்விடமிருந்து நம்மை தூரமாக்குகிறது. மன்னிப்பு கோருவது அல்லாஹ்விடம் நம்மை நெருக்கமாக்குகிறது; நேசமாக்குகிறது, நாம் பாவம் செய்வதில்லை, தூய்மையாக இருக்கிறோம் என்ற எண்ணத்தை ஷைத்தான் நமது உள்ளத்தில் போடுவதால் நாம் சிறிது கர்வம், பெருமை கொள்கிறோம். இதனை அல்லாஹ் வெறுக்கிறான். நாம் மன்னிப்பு கேட்கும்போது பணிவு, அல்லாஹ் தண்டிப்பான் என்ற அச்சம் ஏற்படுகிறது. இதனை அல்லாஹ் விரும்புகிறான். அதனால், அல்லாஹ் தூய்மையானவர்களை விட மன்னிப்பு கேட்பவர்களை முன்னிலைப்படுத்துகிறான்.
“…நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து மீள்பவர்களை நேசிக்கிறான்; சுத்தமாக இருப்பவர்களையும் அவன் பிரியப்படுகிறான்” (அல்குர்ஆன் 2:222)
“என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 5304)
மன்னிப்புத் தேடுபவர்களைக் கண்டு அல்லாஹ் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான் என்பதையும் கீழ்வரும் ஹதீதில் காணலாம்.
“உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஓட்டகம் ஓடிவிட்டது. அதன்மீதே அவரது உணவு, பானம் இருந்தன. அவர் (ஒட்டகத்தை தேடியலைந்தும் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு மரத்திற்கு அருகில் வந்து, அதன் நிழலில் படுத்தார். அவர் ஓட்டகம் கிடைக்காத நிலையில் நிராசையடைந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதைக் கண்டார்.
உடனே, அதன் கடிவாளத்தைப் பிடித்து, மகிழ்ச்சிப் பெருக்கில் “(இறைவா! நீ என் இறைவன். நான் உன் அடிமை” என்று சொல்வதற்குப் பதிலாக? “இறைவா! நீ என் அடிமை, நான் உன் எஜமான்” என்று தவறுதலாகக் கூறிவிட்டார். இந்த மனிதரை விடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீள்வதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 5300)
நபி(ஸல்) அவர்களின் நிலை :
முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகவும் (பார்க்க : புகாரி : 4836, முஸ்லிம் 2029) நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும் (அல்குர்ஆன் 68:4, புகாரி 6203, முஸ்லிம் 4627) இருந்த நபி(ஸல்) அவர்கள் மன்னிப்புத் தேடுவதில் அதிகம் அதிகம் கவனம் செலுத்தினார்கள். (பார்க்க: அல்குர்ஆன். 110:3, புகாரி: 6307, முஸ்லிம் : 5235)
“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மூன்று முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (அஸ்தஹ்பிருல்லாஹ்) கோரிவிட்டு “அல்லாஹும்ம அன்த்தஸ்ஸலாம், வமின்கஸ்ஸலாம், தபாரக்தயாதல் ஜலாலி வல் இக்ராம்” (இறைவா! நீ சாந்தி(அமைதி) அளிப்பவன் உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும், மேன்மையும் உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று கூறுவார்கள்.” (முஸ்லிம் : 1037)
மற்ற நபிமார்களின் நிலை:
படைப்பினங்களின் தேவைகளை நிறைவு செய்வது அல்லாஹ் மட்டுமே. அவன் மட்டுமே தேவைகள் அற்றவன் (பார்க்க 35:15, 47:38) அதில் நபிமார்களும் விதிவிலக்கல்ல. (பார்க்க : 28:24) நபிமார்கள் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கும், தவறுகளுக்கும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடியதை அல்குர்ஆனில் பல இடங்களில் நாம் காணலாம். (பார்க்க : 2:128, 7:23,151,155, 11:47, 14:41, 28:16, 38:24,35, 60:5) அல்லாஹ் மன்னிக்காவிடில் நாம் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம் என்பதை நன்கு உணர்ந்தனர். அதனால், மன்னிப்புத் தேடினர்.
நமது நிலை :
நாம் மறந்தும் (20:115), அறியாமலும் (16:119), இயல்பாலும், சூழ்நிலையாலும் (75:5), மகிழ்ச்சி, இன்பம் தரக்கூடியதாக இருப்பதாலும், பாவங்களை ஷைத்தான் அழகானதாக, அலங்காரமான தாகக் காண்பிப் பதாலும் (9:37, 16:63, 29:38, 35:8), அல்லாஹ் நீதியாளன் (10:54, 40:20), வேதனை செய்வதில் கடுமையானவன் (40:3) என்பதை மறந்துவிட்டு, ஈமான் மட்டும் போதும் சொர்க்கம் செல்ல என்று இறுமாப்பு கொள்வதாலும் (புகாரி 129, முஸ்லிம் 52), சிறிய பாவங்களைத்தானே செய்கிறேன் என்று நினைப்பதாலும் (புகாரி 6492), பெரிய பாவங்களைச் சிறிய பாவங்கள்தானே என்று அலட்சியப்படுத்துவதாலும் (அ.கு. 49:11,12, புகாரி 6052), பாவங்களைச் செய்துவிட்டு இவை பாவங்களே இல்லை என்று நினைப்பதாலும் (அ.கு. 104:1, புகாரி 6308) பாவங்களை மெய் மறந்து செய்கிறோம். சிறிய பாவங்களோ, பெரிய பாவங்களோ அவைகள் நம்மை நரகப் படுகுழியில் தள்ளிவிடும். ஆகவே, பாவங்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளவேண்டும். அதை மீறி பாவங்கள் ஏதாவது செய்துவிட்டால் அல்லாஹ்விடம் உடனடியாக மன்னிப்புத் தேடிட வேண்டும்.
மன்னிப்புத் தேடாவிட்டால் அல்லது தாமதப்படுத்தினால் :
பாவங்கள் நமக்குப் பிடித்தமானதாக இருப்பதால் அது தவறானதாக, தீமையானதாக தெரிவதில்லை. நாம் பாவத்தை அடுத்து அடுத்து செய்து கொண்டிருந்தால் அது பழக்கமாகி நல்ல செயல் என்ற எண்ணத்தை மனதில் விதைத்து பாவம் செய்வதை தொடர் கதையாக்கி விடுகிறது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “”ஒரு அடியார் ஒரு தவறு செய்தால் அவருடைய உள்ளத்தில் கரும் புள்ளி ஒன்று குறிக்கப்படும். அவர் குற்றம் செய்வதை கைவிட்டு, பாவமன்னிப்பு தேடி, பாவமீட்சி பெற்றுவிட்டால் அவர் உள்ளம் மாசற்றதாக, தூய்மையானதாக ஆகிவிடும். மீண்டும் அவர் குற்றங்கள் புரிந்தால் கரும் புள்ளிகள் அதிக அளவில் ஏற்படுத்தப்படும். எந்த அளவுக்கு எனில் அவரின் உள்ளம் (கரும் புள்ளிகளால்) நிரம்பிவிடும். அதுவே, அவ்வாறில்லை, மாறாக அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களே அவர்களின் உள்ளங்களில் துருவாக (அழுக்காக) படிந்துவிட்டன. 83:14) என்ற வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ள துருப்படிதல் ஆகும்” (திர்மிதீ 3257)
மரண வேளை நெருங்குவதற்கு முன்னரே பாவமன்னிப்பு கேட்காவிடிலும், மன்னிப்புக் கேட்காத நிலையில் மரணித்துவிட்டாலும் நரக வேதனை நிச்சயம். (பார்க்கஅ.கு.4:18,9:128, 85:10)
பாவத்தைத் தொடர்ந்து செய்யும்போது, இனியும் நம்மை அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்ற சந்தேகத்தை ஷைத்தான் நம் மனதில் எழுப்பி, மன்னிப்பு கேட்பதில் நிராசை அடைய வைப்பான். நாமும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கமாட்டோம். இப்படியும் நம்மை ஷைத்தான் வழிகெடுப்பான். அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவதன் மூலமே நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். இல்லாவிடில் நரகமே. புகாரி: 6534
நாம் மன்னிப்புத் தேடவேண்டும்:
பாவத்தை விட்டு விலகி அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடும்போது அல்லாஹ் நம்மை மன்னிக்கிறான், நேசிக்கிறான், நெருக்கமாகிறான். பாவங்களை விட்டும் நம்மை அவன் தூரமாக்குவான். அதன்மூலம் நாம் வெற்றியடைந்து சொர்க்கம் செல்லலாம். (பார்க்க: அ.கு. 3:17,135,147, 4:17, 5:39,74, 7:147,153, 16:119, 49:11)
நாம் மன்னிக்க வேண்டும் :
அல்லாஹ் நமது பாவங்களை மன்னிக்கவேண்டும் என்றால், நமக்கு மற்றவர்கள் செய்த தவறுகளை, அநீதிகளை நாம் மன்னிக்கவேண்டும். நற்குணங்கள் நிறைந்தவர்களிடம் தான் மன்னிக்கும் மனப்பான்மை இருக்கும். இது இறையச்சம், மறுமை அச்சம் உள்ளவர்களுக்கே சாத்தியமாகும். (பார்க்க: அ.கு. 2:263, 3:134, 7:199, 24:22, 42:40,43, புகாரி: 4750, 4757) மற்றவர்களுக்கு நாம் ஏதாவது தவறோ, அநீதியோ இழைத்திருந்தாலும் மன்னிப்பு அவர்களிடம் கேட்கவேண்டும். அவர்கள் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான்.
மன்னிப்பு தேடுவதால் ஏற்படும் பலன்கள் (நன்மைகள்) :
நாம் மன்னிப்புத் தேடுவதால் அல்லாஹ் நமக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் பலவித நன்மைகளைத் தருகிறான். அவைகளில் ஒருசிலவற்றை இங்கு நாம் பார்ப்போம். உதவிசெய்ய ஆண்மக்கள், செல்வம், மழை, நதி, தோட்டம், சக்தி(பலம்), சுகமான வாழ்வு இறையருள் கிடைக்கும் கவலை நீங்கும். வேதனை (உலக தண்டனை) இருக்காது. அல்லாஹ்வின் நெருக்கம், ஆதரவு கிடைக்கும். வானவர்கள் துஆ செய்வர், இரு உலகிலும் வெற்றி, சொர்க்கம் கிடைக்கும். அல்லாஹ்வின் மன்னிப்பும் கிடைக்கும். (பார்க்க: அ.கு. 4:110, 8:33, 11:3,52, 21:88, 24:31, 25:70, 38:25, 40:7,8, 71:10-12) ஆகவே, நாம் தினமும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (தவ்பா) தேடிக் கொண்டே இருப்போம். அல்லாஹ்வின் அருள் பெற்று சொர்க்கம் செல்வோம். அல்ஹம்துலில்லாஹ்!