பல்சமயச் சிந்தனை!
ஆசிரியர் குழு
2025 பிப்ரவரி தொடர்ச்சி…
மதங்கள் தோன்ற முக்கிய காரணங்கள்!
இறைத் தொடர்பில்லாது மதங்கள் தோன்ற நான்கு பெருங்காரணங்களைச் சொல்லலாம்.
1. மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்குவது:
உலக ஆதாயம் கருதி, ஒரு சாரார் மார்க்கத்தை வணிகப் பொருளாக ஆக்கினர். மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்கிறோம் என்று எழுந்த இந்தக் கூட்டத்தினர், உலக ஆதாயத்தில் குறியாக இருப்பதால், வியாபாரத்தில் மிகுந்த இலாபத்தை எதிர்பார்த்து, அரிசியில் கல்லைக் கலப்பது போல், மிளகாய்த்தூளில் செங்கல் பொடியைக் கலப்பது போல், இவர்களும் மார்க்கத்தில் கலப்படம் செய்யும்போது, அவை மதங்களாக உருப்பெறுகின்றன. இதனால்தான் உலகில் தோன்றிய அனைத்துத் தூதர்களும் ஒரு விசயத்தை மிகத் தெளிவாகவும், வெளிப் படையாகவும் அறிவித்தார்கள். அவ்வாறு செய்யும்படி இறைவன் கட்டளை பிறப்பித்தான். அது, “மார்க்கத்தை உங்களுக்குப் போதிப்பதற்காக, எவ்விதக் கூலியையும் கேட்கவே இல்லை. இதற்குரிய கூலி எங்கள் இறைவனிடமே இருக்கிறது‘ (பார்க்க : 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47,38:86,42:83) என்ற அறிவிப்பாகும்.
மார்க்கத்தை உலக ஆதாயத்திற்காக விற்பது குறித்து எல்லா நெறிநூல்களும் வன்மையாகக் கண்டிக்கின்றன. குறிப்பாக இறுதி நெறிநூலில் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்ட வசனங்கள் பல தெளிவாக இருக்கின்றன. உபாதா இப்னு ஸாமித்(ரழி) என்ற இறுதித் தூதரின் தோழருக்கு, மார்க்கத்தை கற்றுக்கொடுத்ததற்கு உதவியாக ஒரு வில்லைக்கூட அன்பளிப்பாகப் பெற அனுமதிக்கவில்லை. நபி(ஸல்) நரக நெருப்பு வளையம் உமது கழுத்தில் மாட்டப்பட வேண்டுமென்றால், வில்லைப் பெற்றுக்கொள்ளும் என்று இறுதித்தூதர் எச்சரித்தார்கள்.
மார்க்கத்தைக் கற்றுக்கொண்டவர்கள், கற்றுக்கொடுத்தவர்கள் என்னதான் வறுமையில் உழன்றாலும் அதற்கு மகத்தான கூலி மறுமையில் இருக்கிறதென்று ஊக்கப்படுத்தினார் களேயல்லாமல், பிறரிடமிருந்து அதற்குக் கூலி பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னதாகச் சான்று இல்லை. இறைத்தூதரின் போதனைக்கு மாறாக மார்க்கத்தைக் கொண்டு தங்கள் உலகத் தேவைகளை ஒரு சாரார் நிரப்ப முற்பட்டதால், மார்க்கத்தில் கலப்படம் செய்து மதங்களை உண்டாக்கினார்கள். மதங்களை வைத்து வயிறு வளர்ப்பவர்களை, நேரான வழியில் இருப்பதாக நீங்கள் ஒருபோதும் நினைக்க வேண்டாம். அவர்களும் வழிகெட்டு, மக்களுக்கும் கோணல் வழிகளைக் காட்டி நேர்வழியைக் கெடுக்கிறார்கள். (பார்க்க: 9:9,34, 31:6)
அறிஞர்களும் தவறு செய்யக் காரணம்!
இவர்களால் போதிக்கப்பட்ட மதங்களை ஆராய்ந்த மார்க்ஸ், ரஸ்ஸல், லெனின், பெரியார், அண்ணா போன்ற மக்களால் அறிஞர்களாக மதிக்கப்படுகின்றவர்கள்; மதம் அபினி போன்றது; வெளியூட்டக்கூடியது; மக்களை ஏமாற்றிச் சுரண்ட வழிவகுப்பது; மக்களில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குவது; பொதுவாக உலக அமைதியைக் கெடுப்பது. ஆகவே மதங்களும் தவறுடையவை, மதங்கள் போதிக்கும் கடவுளும் இல்லை. மறுமையும் இல்லை என்ற முடிவுக்கு வந்து, மக்களுக்கு அதைப் போதிக்கத் தொடங்கினார்கள்.
மனிதர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்ட மதங்களை ஆராய்ந்தார்களே அல்லாமல், அவற்றிற்குப் பின்னே இருக்கக்கூடிய இறைவனால் கொடுக்கப்பட்ட உண்மையான ஒரே மார்க்கத்தை, இந்த அறிஞர்கள் அறியத் தவறிவிட்டார்கள். அதன் விளைவு மதவாதிகள் உலகைக் கெடுத்தது ஒரு பக்கம் இந்த அறிஞர்கள் உலகை கெடுத்தது ஒரு பக்கம் உலகில் கேடுகள் மலிந்துவிட்டன. இன்று உலகில் மலிந்து காணப்படும் லஞ்ச லாவண்யங்களுக்கும், பஞ்சமா பாதகங்களுக்கும் உரித்தான காரண காரியங்களில், இவர்களுக்கும் பெரும் பங்குண்டு. இறைவன் இருக்கிறான். மறுமை இருக்கின்றது. கேடு செய்தால் மறுமையில் தண்டனை உண்டு என்று அஞ்சி நடந்த சிலரும், இந்த அறிஞர்களின் போதனையால், மக்களுக்கும், அரசுக்கும் தெரியத்தான் தவறுகள் செய்யக்கூடாது. தெரியாமல் எப்படிப்பட்ட தவறுகளையும் செய்து கொள்ளலாம் என்று துணிந்து தவறுகளில் மூழ்கிவிட்டார்கள். அவர்களைப் பின்பற்றும் இக்கால அறிஞர்கள் சிந்தித்தால் உலகைச் சீர்செய்து, அமைதி காக்க அவர்களின் பங்கைச் செலுத்தமுடியும்.
2. உலகில் கிடைக்கும் இலாப, நஷ்டம், இன்ப துன்பம் வைத்து மதங்களை நம்புதல் :
மார்க்கத்தை மதங்களாக்கியவர்களின் மாயவலையில், விளக்கில் விழும் பூச்சீகளைப் போல், மக்கள் கூட்டம் கூட்டமாக விழுவது மதங்கள் தோன்ற ஒரு காரணமாகும். இம்மக்கள் அறிவில் குறைந்த மக்களே, இவ்வாறு அவர்கள் கண்மூடித்தனமாக விழுவதற்கு மதவாதிகளின் சொல்லை நம்பிச் செயல்படுவதால், தங்கள் உலகச் சிக்கல்கள் தீர்வதுபோல் காணப்படுவதாகும். சிலைக்கு முன்னர், சமாதிக்கு முன்னர், கொடிக்கு முன்னர் சென்று முறையிடுவது மூலம், தங்கள் தேவைகள் நிறைவடைகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே அவற்றில் உண்மை இருப்பதாக உறுதி கொள்கிறார்கள். இது இறைவனின் சோதனை என்பதை அவர்களால் உணரமுடியவில்லை. மனிதனுக்குப் பசியைக் கொடுத்து இறைவன் சோதிக்கிறான்.
திருடுவது தவறா? கஷ்டப்பட்டு உழைத்துத் தேடிச் சாப்பிட்டாலும் பசி தீரும். எளிதாகத் திருடிச் சாப்பிட்டாலும் பசி தீரும். திருடிச் சாப்பிட்டாலும் பசி தீர்ந்துவிடுகிறதே திருடுவது எப்படித் தவறாகும்? என்றோ, மணமுடித்து மனைவியைக் கொண்டு அடையும் அதே இன்பம் விபச்சாரியின் வழியிலும் கிடைக்கிறதே. அது எப்படி விபச்சாரம் ஆகும் என்று எவரும் சொல்ல முடியுமா? இங்கு நினைப்பதை அடைவதை விட எப்படி அடைகிறோம் என்றுதான் பார்க்கிறோம். திருடிச் சாப்பிடுவதால் பசி தீராவிட்டால், விபச்சாரத்தால் இன்பம் கிடைக்காவிட்டால் மனிதன் திருடவோ, விபச்சாரம் செய்யவோ மாட்டான். சோதனைக்காக மனிதனை உலகில் படைத்திருக்கிறேன் என்று இறைவன் சொல்கிறான். (பார்க்க 67:2). அப்படி என்றால் ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்க இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நேர்வழி; அது இறைவன் கொடுத்தது. மற்றொன்று குறுக்கு வழி; இது சாத்தான் கொடுத்து.
இறைவழியே இறைவனைத் திருப்திப்படுத்துகின்றது. குறுக்கு வழி சாத்தானைத் திருப்திப்படுகிறது. எப்படியும் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளமுடியும் என்பவன் மனிதனல்லன். அவன் விலங்கு ஆவான் தான் விரும்பியது தனக்குக் கிடைப்பதை விட, தான் விரும்பியதை எப்படி அடைந்ததோம் என்று சிந்தித்துச் செயல்படுபவனே மனிதன், நாம் விரும்புவதை அடைவதை விட இறை ஆணையை நிறைவேற்றுவதே நமக்கு வெற்றியைத் தரும். இறை ஆணைப்படி நடந்து, நம் விருப்பத்தை அடைவதை விட மிகவும் கடினமானது ஆகும். ஆனால் இந்தக் கடினத்தில்தான் நம் வெற்றி இருக்கிறது. இதை நாம் உணர வேண்டும்.
அப்போதைய துன்பம் நீங்கினால் வெற்றியா?
அப்போது ஏற்படும் துன்பம் நீங்கினால், சிக்கல் தீர்ந்தது; வெற்றி அடைந்து விட்டோம் என்று நினைக்கிறோம். கயிறு இழுப்புப் போட்டியில், வெற்றிக்காக இரு சாராரும், மிகவும் துன்பப்பட்டு இழுக்க வேண்டியுள் ளது. முடிச்சு ஒரு பக்கம் சென்றுவிட்டால், போட்டி முடிந்தது.
இரு சாராருக்கும் அப்போதைக்கு இழுக்கும் துன்பம் தீர்ந்தது. தோற்றவனுக்கும் அப்போதைக்கு இழுக்கும் துன்பம் தீர்ந்ததால், இங்கே வெற்றியடைந்து விட்டதாக எண்ண முடியுமா? இப்படித்தான் இறைவனின் சோதனைகளில் தோற்றுவிடுதவன் காரணமாக சோதனையினால் ஏற்பட்ட துன்பமும் நீங்கி விடுகின்றது. துன்பம் நீங்கிவிட்டதால், நாம் வெற்றி அடைந்து விட்டதாகவும், நேரான மார்கத்தில் இருப்பதாகவும் எண்ணி ஏமாறுகிறோம். மக்கள் மதங்களில் மூழ்கி இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணமாக இருக்கின்றது.
ஆவி வருவது உண்மையா?
இதே அடிப்படையில், உயிரோடிருப்பவர்களிடம் இறைத்தூதர்களின், மகான்களின், இறந்தவர் களின் ஆவி வருகின்றது. ஜின் (ஒரு படைப்பு) வருகின்றது. சாமி வருகின்றது; அவை சொல்வது கொண்டு நம் சிக்கல்கள் தீர்க்கின்றன என்று நம்பி செயல்படுவதும் ஒரு வழிகேடேயாகும். சாத்தான் இப்படிப்பட்ட சாகஸங்களை எல்லாம் செய்து, நம்மை நம்பவைத்து ஒரே இறைவனிடம் வைக்கவேண்டிய தூய நம்பிக்கையை அவனது படைப்புகளிடம் வைத்து, வழி விலகி நரகில் விழுவதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்து மகிழ்கிறான். பாமர மக்கள் சாத்தானின் வலையில் எப்படி எல்லாம் சிக்கிச் சீரழிக் கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பாமர மக்களை நரகப் படுகுழியிலிருந்து காப்பாற்றும் முயற்சியல் ஈடுபடுவோம் வாருங்கள். (பார்க்க 17:1125, 8:48, 14:22, 16:63,100, 17:64, 19:83, 20:116128, 22:3, 26:221-223, 35:6, 36:60, 58:19)
3. அறிஞர்களிடம் ஏற்படும் எமாற்றம்!
மதங்கள் உண்டாக மூன்றாவது காரணம், அறிஞர்களிடம் ஏற்படும் ஏமாற்றமாகும். இவர்கள் இறைவனை அடைவதாக எண்ணிக்கொண்டு, தூதர்களும், இறுதித்தூதரும் காட்டித் தந்த வழிவிட்டு, அவர்கள் விருப்பத்திற்கு ஒரு வழி உண்டாக்கி, ஏதாவதொரு மந்திரத்தையோ மந்திரங்களையோ தொடர்ந்து ஜபித்துக் கொண்டிருப்பதால், அவர்களுக்கு ஏற்படும் நிலை, கனவிலும் நனவிலும் ஏற்படும் காட்சி, தோற்றம் இவற்றில் மயங்கி, தாங்கள் மிகவும் பெரியதொரு படித்தரத்தை அடைந்து விட்டதாகவும் வெற்றியடைந்து விட்டதாவும் அவர்களே முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
இதற்கு அவர்களுக்கு ஆதாரம், அவர்கள் நிலையும், காணும் காட்சியும் தோற்றமுமே அல்லாமல், இறுதி நெறிநூலோ, இறுதித் தூதரின் போதனைகளோ அல்ல. இரங்கத் தக்கவர்கள் அவர்கள். ஒருவன் தனக்கு முன்னே ஒரு கல்லை வைத்துக்கொண்டு, கல்லே, கல்லே என்று தொடர்ந்து ஜபித்து வந்தாலும், அவனுக்கும் ஒரு நிலை ஏற்படும்; அவனுக்கும் கனவிலும், நனவிலும் தோற்றங்கள் ஏற்படலாம் என்பதை அறிய மறந்துவிட்டார்கள். சூரியக் கதிர்களை, ஒரு குவிலென்ஸ் மூலம் ஓரிடத்தில் சேர்த்தால், கடுஞ்சூடு ஏற்பட்டு, நெருப்புப் பிடித்து எரிவதைப் பார்க்கிறோம்.